பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 3 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தையும் தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார். இதற்கு அடுத்ததாக துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
22 வயதான மனு பாக்கர், ஒரே ஒலிம்பிக் தொடரில் இரட்டை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். ஹரியானா மாநிலம் ஜஜ்ஜர் மாவட்டம் கோரியா கிராமத்தை சேர்ந்த மனு பாக்கருக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் நாட்டுக்கு பெருமை சேர்த்த மனு பாக்கர், இன்று தாயகம் திரும்பினார்.
பாரீஸில் இருந்து 'ஏர் இந்தியா' மூலம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் திரும்பிய மனு பாக்கருக்கு அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மனு பாக்கர் வந்த ஏர் இந்தியா விமானம் 1 மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு வந்தது. ஆனால் இதையும் பொருட்படுத்தாமல், லேசாக தூறிய மழைக்கு மத்தியிலும் விமான நிலையத்தில் காத்திருந்த மக்கள் இரட்டை பதக்க மங்கைக்கு மிகப்பெரும் வரவேற்பு கொடுத்தனர்.
மனு பாக்கரின் குடும்பத்தினரும், நண்பர்களும் அவரை தலையில் தூக்கி வைத்து, அவருக்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் உற்சாகமாக கொண்டாடினார்கள். மனு பாக்கருடன் அவரது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவும் வந்திருந்தார். அவருக்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களின் அளப்பரிய அன்பில் நனைந்து மனு பாக்கர் திக்குமுக்காடிப் போனார்.
மனு பாக்கரின் பெற்றோர்களான ராம் கிஷன் மற்றும் சுமேதா ஆகியோரும், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களை சேர்ந்த விளையாட்டுத் துறை அதிகாரிகளும் மனு பாக்கரை வரவேற்றனர். மனு பாக்கரின் தாய் சுமேதா, தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்த தனது மகளை கட்டியணைத்து முத்த மழை பொழிந்தார்.
''நமது மகள் 22 வயதிலேயே ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதற்கு முன்பு யாரும் செய்யாத சாதனையை அவர் படைத்துள்ளார். எனது மகன் ஜஸ்பால் ராணா மனு பாக்கரின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று ஜஸ்பால் ராணாவின் தந்தையும், உத்தரகாண்ட் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான நாராயண் சிங் ராணா தெரிவித்துள்ளார்.