அப்பல்லோவில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை.. சிபிஐ விசாரணை கோரி வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோவில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Jul 15, 2024 - 14:32
Jul 18, 2024 - 10:49
 0
அப்பல்லோவில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை.. சிபிஐ விசாரணை கோரி வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
Jayalalitha death high court

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10.25 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . 70 நாட்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். 

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பலரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.ஆறுமுகசாமி ஆணையம் பல ஆண்டுகள் விசாரணை நடத்தியது. கடந்த 2022ஆம் ஆண்டு விசாரணை அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழ்நாடு அரசிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
"காலாழ் களரில் நரியிடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு அதிகாரம்" என்ற திருக்குறளை சொல்லியிருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி,  வேல் ஏந்திய வீரரைக் கோர்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்தநிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள் இருப்பதால் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த போதும், அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவரது உடலை எம்பாமிங் செய்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருமுறை மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தவறான தகவல் வெளியிட நேர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow