'என்கவுன்ட்டர்'.. அழுது புலம்பிய ஆம்ஸ்ட்ராங் வழக்கு குற்றவாளிகள்.. போலீசுக்கு நீதிபதி எச்சரிக்கை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, ராமு (எ) வினோத், அருள் மற்றும் ஹரிஹரனை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவர்கள் திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தது போல தங்களையும் என்கவுன்ட்டர் செய்ய உள்ளதாக நீதிபதி ஜெகதீசனிடம் கூறியுள்ளனர்.
சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல ரவுடி ஆற்காடு ரவுடி சுரேஷ் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதற்கட்டமாக புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய திருவேங்கடம் என்கவுன்ட்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் கட்சிகள் பாரபட்சமின்றி அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது பிரபல அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ் ஆகிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பிரபல பெண் ரவுடியும், முன்னாள் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளருமான புளியந்தோப்பு அஞ்சலை கைது செய்யப்பட்டார். ஆற்காடு ரவுடி சுரேஷ் கள்ளக்காதலி என கூறப்படும் புளியந்தோப்பு அஞ்சலை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததாக தகவல் வெளியானது.
இதன்பின்பு ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அருளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலராக இருந்து வந்த ஹரிதரன் என்பவரையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, ராமு (எ) வினோத், அருள் மற்றும் ஹரிஹரனை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோர், திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தது போல தங்களையும் என்கவுன்ட்டர் செய்ய உள்ளதாக நீதிபதி ஜெகதீசனிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ''குற்றவாளிகளை எப்படி அழைத்து செல்கிறீர்களோ? அதே போல நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், உடம்பில் சிறு காயம் கூட ஏற்படக் கூடாது, சரியான நேரத்தில் சாப்பாடு வழங்க வேண்டும்'' என உதவி ஆணையர் சரவணனுக்கு நீதிபதி ஜெகதீசனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து இது தொடர்பான உத்தரவாத பத்திரத்தில் உதவி ஆணையர் சரவணனிடம் நீதிபதி கையெழுத்து வாங்கினார். பின்பு பொன்னை பாலு, வினோத், அருளுக்கு 3 நாளும், ஹரிஹரனுக்கு 5 நாளும் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
What's Your Reaction?