Engineering Council: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு... அமைச்சர் பொன்முடி கொடுத்த அப்டேட்

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

Jul 15, 2024 - 14:28
Jul 18, 2024 - 10:49
 0
Engineering Council: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு... அமைச்சர் பொன்முடி கொடுத்த அப்டேட்
பொறியியல் கலந்தாய்வு

சென்னை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து தகவல்கள் தெரிவித்தார். அதன்படி, வரும் 22ம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் எனத் தெரிவித்த அவர், செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறும் என்றார். முக்கியமாக 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் இந்தாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் எனக் கூறினார். வரும் 22ம் தேதி முதலில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  

மேலும், ஜூலை 22, 23 தேதிகளில் 7.5%, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ளதாகவும், இதனால் மானவர்களை அதிகளவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான கல்வி கட்டணம் குறித்தும் அமைச்சர் பொன்முடி விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது பொறியியல் படிப்புக்கான கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், கல்வி கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 21,946 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பாடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, புதிதாக வளர்ந்து வரும் துறைகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தமிழக மாணவர்களின் கல்வி வழங்கும் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பொறியியல் கல்வித்திறனை அதிகரிக்க, இந்தாண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார். அதேபோல், சேலம் பொரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீட்டிப்பு குறித்த, ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

பொறியியல் கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்ய ரெடியாகிவிட்டனர். நீட் கவுன்சிலிங் ஜூலை மூன்றாவது வாரம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு அடுத்த வாரம் முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow