Euro 2024 Final: யூரோ சாம்பியன் ஃபைனல்... இங்கிலாந்து அணியை போராடி வென்ற ஸ்பெயின்!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஸ்பெயின்.

Jul 15, 2024 - 13:04
Jul 15, 2024 - 14:07
 0
Euro 2024 Final: யூரோ சாம்பியன் ஃபைனல்... இங்கிலாந்து அணியை போராடி வென்ற ஸ்பெயின்!
Euro 2024 Final

பெர்லின்: கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த யூரோ கோப்பை இறுதிப் போட்டி, ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்றது. இதில் மூன்று முறை யூரோ சாம்பியனான ஸ்பெயின் அணி, இங்கிலாந்துடன் மோதியது. துடிப்பான இளம் வீரர்களுடன் களமிறங்கிய ஸ்பெயின் அணி, இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. முதல் பாதியில் பந்து பெரும்பாலும் ஸ்பெயின் வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனாலும், அவர்களின் கோல் முயற்சிகள் அனைத்தையும் இங்கிலாந்து பின்கள வீரர்கள் திறம்பட தடுத்தாடினர். 

அதேபோல், இங்கிலாந்து அணியின் கோல் முயற்சிகளுக்கும், ஸ்பெயின் வீரர்கள் இடம் கொடுக்காமல் அருமையாக டிஃபென்ஸ் செய்தனர். இதனால் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது. பிரேக் முடிந்ததும் இரண்டாம் பாதி தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி அற்புதம் நிகழ்த்தியது. ஆம்! அந்த அணியின் இளம் வீரரான 17வயதே ஆன யமல், 3 இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றி பாஸ் கொடுக்க, அதனை வில்லியம்ஸ் கோலாக மாற்றினார். ஸ்பெயின் அணியின் இளம் வீரர்களான யமல், வில்லியம்ஸ் இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்திய துல்லிய தாக்குதலில் இங்கிலாந்து நிலை குழைந்து போனது.

இதனால் ஆட்டம் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியின் வசம் சென்றது. இதனையடுத்து பதில் கோல் திருப்பியே ஆக வேண்டும் என்ற முனைப்பில், இங்கிலாந்து அணி வீரர்கள் அசுரத்தனமாக ஆடினர். அவர்களின் முயற்சிக்கு 73வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஸ்பெயினின் வலிமையான டிஃபென்ஸ் கோட்டையை தகர்த்து, பால்மர் கோல் அடித்து அசத்தினார். மாற்று வீரராக 70வது நிமிடத்தில் உள்ளே வந்த பால்மர், அடுத்த மூன்றே நிமிடங்களில் இங்கிலாந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்த கோல் ஸ்பெயின் அணியையும் அந்நாட்டு ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் காரணமாக ஆட்டம் 1-1 என்ற சமன் நிலைக்குச் செல்ல, இறுதிக் கட்டத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. 

ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், ஸ்பெயின் வீரர் வில்லியம்ஸ் கொடுத்த பாஸை, அந்த அணியின் ஒயர்சபால் கோலாக மாற்றினார். இதுவே ஸ்பெயின் அணியின் வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது. இதற்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து வீரர்கள் முயற்சி எடுக்கும் முன்பே போட்டியும் முடிவுக்கு வந்தது. இதனால், ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 4வது முறையாக யூரோ சாம்பியன் ஆனது. இதற்கு முன்பாக 1964, 2008, 2012 ஆண்டுகளில் ஸ்பெயின் அணி கோப்பையை வென்றிருந்தது. அதேபோல் கடந்த யூரோ தொடரில் இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை தவறவிட்டதை போல, இந்த முறையும் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இதனால் இங்கிலாந்து வீர்கள் மட்டுமின்றி அந்நாட்டு ரசிகர்களும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். 

யூரோ தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்ற முதல் அணி என்ற சாதனைக்குச் சொந்தமானது ஸ்பெயின். இந்தத் தொடர் முழுவதும் மொத்தம் 15 கோல்கள் அடித்துள்ள ஸ்பெயின், எதிரணிக்கு 4 கோல்களை விட்டுக் கொடுத்துள்ளது. இந்தத் தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 17 வயதான லாமின் யாமல் வென்றார். அதேபோல் தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் அந்த அணியின் ரோட்ரி வென்றது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமை ஸ்பெயினின் அல்கராஸ் வென்ற கையோடு, யூரோ தொடரிலும் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow