திருவேங்கடம் சொல்ல வந்த உண்மை என்ன? - கேள்வி எழுப்பும் அண்ணாமலை
Annamalai About Thiruvenkadam Encounter : சரணடைந்த ஒருவர் ஏன் தப்பியோட வேண்டும், கையில் துப்பாக்கி வந்தது எப்படி உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் உள்ளது.

திருவேங்கடத்தை என்கவுண்டரில் கொன்ற நிலையில் திருவேங்கடத்தை ஏவிவிட்டவர் யார்? திருவேங்கடம் சொல்ல வந்த உண்மை என்ன? என்பது குறித்து தெரிய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Annamalai About Thiruvenkadam Encounter : சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்காக குழு அமைத்து அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறித்து விளக்கமாக பேசப்பட்டுள்ளது.. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பெயரை மாற்றி அப்படியே வைத்துள்ளனர். தமிழக அரசு இன்னும் சிறப்பாக செய்யட்டும். குறிப்பாக ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் மத்திய அரசு செய்யும். இது குறித்து புதிய கல்வி கொள்கையில் பேசப்பட்டு உள்ளது.
நீட் தேர்வை பொருத்தவரை, நீட் தேர்வு வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளோம். தமிழகம் இந்தாண்டு தான் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. 59 சதவீதம் விழுக்காடு தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு நடத்தும் அமைப்பில் குளறுபடி உள்ளதா? என்று உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது. தவறுகளை சரி செய்து வருகின்றனர். நீட் தேர்வில் வினாத்தாள் வெளியானது; ஒரு சில இடங்களில் நடந்துள்ளது. அதில் யார் யார் தவறு செய்துள்ளார்களோ? அதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திமுக நீட் தேர்வை வைத்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது. நீட் தேர்வு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பும், பின்பும் வெள்ளை அறிக்கை தரவேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வுக்கு முன்பாக எத்தனை பேர் சென்றுள்ளார்கள், நீட்தேர்வுக்கு பிறகு எத்தனை பேர் சேர்ந்து உள்ளார்கள் என்பது குறித்து தனித் தனியாக பிரித்து தர வேண்டும். இதை கொடுத்தாலே தமிழக மக்களுக்கு தெரிந்துவிடும். நீட் தேர்வு ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவியாக உள்ளது. டேட்டாவை கொடுக்காமல் வாய் பேச்சை மட்டுமே, தமிழக அரசு பேசி வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை வெளியிட்டுள்ள சிசிடிவி உண்மைதான். காட்சிகளில் வந்த நபர்களின் புகைப்படத்தை வைத்து குற்றவாளிகளை இவர்கள்தான் குற்றவாளி என்று சொல்லி உள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால் கூலிப்படையை ஏவிவிட்டது யார்? இதற்கு உதவியாக இருந்தது யார்? இதற்கு மூளையாக இருந்தவர் யார் என்பது குறித்து கண்டுபிடிக்க வேண்டும். திருவேங்கடத்தை என்கவுன்ட்டரில் கொன்ற நிலையில் திருவேங்கடத்தை ஏவிவிட்டவர் யார்? திருவேங்கடம் சொல்ல வந்த உண்மை என்ன? என்பது குறித்து தெரிய வேண்டும்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் மரணமா? அல்லது வேறு ஏதாவது மரணமா? என்பது குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் சரணடைந்த ஒருவர் ஏன் தப்பியோட வேண்டும், கையில் துப்பாக்கி வந்தது எப்படி உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் உள்ளது. திருவேங்கடம் ஒரு குற்றவாளி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்; திருவேங்கடத்திற்கு பின்னால் உள்ளது யார் என்பதை தான் எங்களுடைய கேள்வி என்றும் கூறினார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்துவது இல்லை. பிஎம் கிஷான் திட்டத்தில் எவ்வளவு விவசாய நிலம் வைத்திருந்தால் 6 ஆயிரம் ரூபாய் உதவி பணம் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு அளவு நிர்ணித்தது. தமிழகத்தின் 43 லட்சம் விவசாயிகள் 2021 விவசாயிகள் பயனடைந்தனர். இன்றைய தினம் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகிறார்கள். மத்திய அரசின் திட்டத்திற்கு 100 சதவீதம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதற்காக நிறைய விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் செல்லக்கூடாது என்பதற்காக தடுக்கிறார்கள்.
தமிழக அரசியலில் வந்துவிட்டால் ஆடு வெட்டுவது எல்லாம் சாதாரணம்.. எனக்கு இது புதிதல்ல; நான் புகார் கொடுக்கப்போவது இல்லை. நாம் மோதிகொண்டிருப்பது திராவிட அரசியல்; சாதாரண அரசியல் அல்ல... பழிசொல், பொய்யான குற்றச்சாட்டு, பொய்யான புகார் உள்ளிட்டவைகள் சாதாரணம் தான். திமுகவின் முகம் எப்படி உள்ளது என்பது குறித்து தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்பது தான் நான் சொல்கின்ற செய்தி. நாம் இதற்காகவெல்லாம் அஞ்சப்போவது இல்லை” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?






