DMK Secretaries Meet 2024 : ஒரு பக்கம் அதிமுக செயற்குழு.. அதே நாளில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... கட்சியில் மாற்றம்

Minister Duraimurugan on DMK Secretaries Meet 2024 : அமெரிக்கா செல்லும் முன்பாக கட்சியிலும் ஆட்சியிலும் புதிய மாற்றங்களை செய்யப்போகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். 16ஆம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Aug 13, 2024 - 09:56
Aug 13, 2024 - 11:58
 0
DMK Secretaries Meet 2024 : ஒரு பக்கம் அதிமுக செயற்குழு.. அதே நாளில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... கட்சியில் மாற்றம்
Minister Duraimurugan on DMK Secretaries Meet 2024

Minister Duraimurugan on DMK Secretaries Meet 2024 : திமுகவில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற உள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் கூடி மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதே நேரத்தில் கட்சியில் யார் தலைமையில் செயல்பட வேண்டும் என்பது பற்றிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக அண்ணா அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள அதே நாளான ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் 16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பை கிளப்பிய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: முப்பெரும் விழா தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் நிறுவனருமான அண்ணாவின் பிறந்தநாள். அதற்கு இரண்டு நாள்கள் கழித்து, செப்டம்பர் 17ஆம் தேதி, திராவிட இயக்கங்களின் முன்னோடியான பெரியாரின் பிறந்தநாள்.

கடந்த 1949 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதிதான், திமுக தொடங்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும், முப்பெரும் விழாவை வெகு விமரிசையாக கொண்டாட திமுக திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில், திமுகவின் முப்பெரும் விழாவை இந்தாண்டு எங்கு கொண்டாடலாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முப்பெரும் விழா குறித்து ஆலோசிக்க கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் சமீபத்தில் ஒரு பொது விழாவில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் என்று பேசினார். அந்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்ட அவர், ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு துணை முதல்வராக பதவியேற்கலாம் என்று கூறினார். அமைச்சர் கீதா ஜீவன், உதயநிதி ஸ்டாலினை வருங்கால துணை முதல்வர் என்று குறிப்பிட்டு, அவர் விரைவில் பதவி உயர்வு பெறுவார் என்று கூறினார். 

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை உயர்த்துவதற்கான காலம் இன்னும் வரவில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அதே நேரத்தில் அமைச்சர்களின் கருத்துக்களுக்கு இதுவரைக்கும் எந்த வித மறுப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதேநாளில் தான், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டமும் நடைபெறுகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விசயம்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில், அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டும் அதே நாளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow