Bangladesh Issue : வங்கதேச விவகாரத்தில் தலையீடா?.. முதன்முறையாக மனம்திறந்த அமெரிக்கா!
US Involvement in Bangladesh Issue : ''வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், நம்மால் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும். மீண்டும் நாட்டுக்கு திரும்பி மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பேன்'' என்று ஷேக் ஹசினா கூறியதாக தகவல்கள் பரவின.

US Involvement in Bangladesh Issue : வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்த, அவர்களுக்கு ஆளும் கட்சியான அவாமி லீக் மாணவர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். பின்பு வன்முறை நாடு முழுவதும் வெடித்த நிலையில், வங்கதேசத்தில் அரசு அலுவலகங்கள், பொது கட்டடங்கள் ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்து கோயில்களுக்கும் தீ வைக்கப்பட்டன.
தொடர் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார். ஷேக் ஹசீனா ராஜினாமா பிறகு வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படுவதாக ராணுவ தளபதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அமைப்பு விருப்பத்தின் பேரில் வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் முகமது யூனுஸ் பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கிடையே வங்கதேசத்தில் பெரும் வன்முறை ஏற்பட அமெரிக்காவே காரணம் என்று ஷேக் ஹசினா கூறியதாக தகவல் வெளியானது. அதாவது ஷேக் ஹசினா வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தனது நெருக்கமானவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ''வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், நம்மால் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும். மீண்டும் நாட்டுக்கு திரும்பி மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பேன்'' என்று கூறியதாக தகவல்கள் பரவின.
ஆனால் இந்த தகவலை ஷேக் ஹசினாவின் மகன் சஜீப் வாசேத் திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட வீடியோவில், ''எனது தாயார் ஷேக் ஹசினா அமெரிக்கா குறித்து பேசியதாக வரும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது. இது வெறும் வதந்தி. ஷேக் ஹசினா எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை; எந்த தகவலையும் கூறவில்லை. இதை அவரிடமே கேட்டு உறுதிப்படுத்தி விட்டேன்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், 'வங்கதேச விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை' என்று அமெரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''வங்கதேசம் விவகாரம் தொடர்பாக நாங்கள் எதிலும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையீடு உள்ளதாக வரும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது. அதில் ஏதும் உண்மையில்லை. வங்கதேச மக்கள் தங்களுடைய எதிர்கால அரசு குறித்து தீர்மானிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்றார்.
What's Your Reaction?






