Germany Festival Knife Attack : ஜெர்மனி: திருவிழாவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல்... 3 பேர் பலியான சோகம்!

Germany Festival Knife Attack : ''பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவர் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்'' என்று ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.

Aug 24, 2024 - 20:36
Aug 24, 2024 - 20:57
 0
Germany Festival Knife Attack : ஜெர்மனி: திருவிழாவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல்... 3 பேர் பலியான சோகம்!
Germany Festival Knife Attack

Germany Festival Knife Attack : ஜெர்மனி நாட்டின் சோலிங்கன் நகரின் 650வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர். அப்போது திருவிழாவில் கலந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் திருவிழாவில் கலந்து கொண்டவர்களை சரமாரியாக குத்தினார்.

இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனாலும் கத்திக்குத்து தாக்குதலில் ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. முன்னதாக, கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  சென்றனர். ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த நபர் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டார். 

ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்ததால் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய அந்த நபர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார்? என்பது தெரியவில்லை. மேலும் சம்பவ இடத்தில் இருந்தவர்களிடமும், காயம் அடைந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த தாக்குதலுக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சோலிங்கன் நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் கொல்லப்பட்டது என்னை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சோலிங்கன் மேயர் டிம் குர்ஸ்பாக்கிடம் பேசினேன். 

பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவர் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்'' என்று ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார். 

மேலும் ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் கூறுகையில், ''சோலிங்கன் நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய நினைவுகள் இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளது'' என்றார். மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் ஜெர்மனி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow