Pa Valarmathi on Minister Anbarasan : கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “நடிகர்கள் கூடும் கூட்டத்தை, பார்த்தவுடன் மகிழ்ச்சியில் அடடே நாம் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற நினைப்பில் அரசியலுக்கு வருகிறார்கள், அதெல்லாம் எடுபடாது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து சாதித்ததெல்லாம் எம்.ஜி.ஆருடன் போய்விட்டது. எம்.ஜி.ஆருடன் இருந்ததால் ஜெயலலிதாவுடன் போய்விட்டது. இனிமே நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் எடுபட முடியாது. நடிகர்கள் அரசியலுக்கு வரும் கனவெல்லாம் வீணாய்போகும்” என்றார்.
தா.மோ.அன்பரசனின்(TM Anbarasan) இந்த பேச்சுக்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி(ADMK Valarmathi) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களை, குறிப்பாக அரசியலில் இருக்கும் பெண்களை, இழிவுபடுத்திப் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்ட கருணாநிதியின் வழி வந்தவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. கருணாநிதியின் கயமைத்தனமான சொல்லாடல்களுக்கு அன்னை இந்திராகாந்தி முதல் யாரும் தப்பியதில்லை.
மதுரையில் அன்னை இந்திராகாந்திக்கு திமுகவினர் கருப்புக் கொடி காட்டிய கலவரத்தில் அடிபட்டவர்கள் சிந்திய ரத்தம், அவரது புடவையில் சிந்தி கறைபட்ட செய்தி வந்தபோது, 'பெண்களின் புடவையில் ரத்தக்கரை படிவது சாதாரணமானது' என்று ஏகடியம் பேசிய கருணாநிதியின் தொங்கு சதை வழிவந்த அன்பரசன் வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதில் ஆச்சரியமில்லை.
'திராவிட நாடு எங்கே இருக்கிறது' என்று கேட்ட காங்கிரஸ் தலைவர் திருமதி அனந்தநாயகியைப் பார்த்து கிண்டலாக, ஆபாச களஞ்சியமாக கொக்கரித்த கருணாநிதியின் பாதம் தாங்கிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? 'நக்கும் மாட்டிற்கு செக்கும் கிடையாது, சிவலிங்கமும் தெரியாது' என்பது போல் எண்ணெய் வழியும் இடமெல்லாம் நக்கிப் பிழைக்கும் அன்பரசன் போன்றவர்களை அடிமாட்டிற்குக் கூட லாயக்கில்லாத ஜென்மங்களாகத்தான் மக்கள் கருதுவார்கள்.
அன்பரன் அவர்களே, பொதுவெளியில் செல்லும் போது, சற்று கவனமாகச் செல்லுங்கள். உங்களின் நாலாந்தரப் பேச்சைக் கேட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் கொதித்துப் போயுள்ளார்கள். தமிழ் நாட்டில் அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன். நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்த மண்ணில் இருந்து இப்படி ஒரு பீடை அமைச்சராகி இருப்பது கேவலத்திலும் கேவலம்.
அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ் மண்ணிற்காகவே வாழ்ந்து மறைந்த புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் பெரும்புகழ் சில தெருநாய்கள் குரைப்பதால் குறைந்து விடாது. ஒரு சிலரை நாயோடு ஒப்பிட்டு நாயைக் கேவலப்படுத்த விரும்பவில்லை.
இம்மாத இறுதியில் உடல் பரிசோதனைக்காக முதலமைச்சர் அமெரிக்கா செல்ல இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. திமுக கிச்சன் கேபினட் உறுப்பினர்களின் அழுத்தத்தால் மகன் உதயநிதியை, ஸ்டாலின் துணை முதலமைச்சராக்கினால், சிறு பையனிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலையை எண்ணி பலர் அஞ்சுவது அன்பரசன் பேச்சின் மூலம் நன்கு தெரிகிறது.
கைகளில் கொழுத்த பணமிருக்கிறது என்ற திமிரில், டப்பாவுக்குள் மட்டுமே ஓடிய சினிமாக்களில் நடித்த, குறிஞ்சி மலர் நாயகன் ஸ்டாலினின் மகன் உதயநிதியை, வருகின்ற 19-ஆம் தேதிக்குப் பின் துணை முதலமைச்சர் என்று அழைப்போம் என ராஜ விசுவாசி ராஜகண்ணப்பன் மேடைதோறும் முழங்குகிறார். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று அவரது ரசிகர் மன்றத் தலைவராக இருக்கும் மந்திரி அன்பில் மகேஷ் துந்துபி கொட்டுகிறார்.
இவர்களுக்கு இடையே பல சீனியர் தி.மு.க. தலைவர்கள் அபஸ்வரம் வாசிக்கத் தொடங்கியுள்ளனர். குரங்கு, குட்டியின் வாலை விட்டு சூடு பார்ப்பது போல், சீனியர்கள் ஒரு நிகழ்ச்சியில், 'சினிமாவில் நடிப்பதால் ஆட்சிக்கு வருவோம் என்று நினைத்தால் அது நடக்காது' என்று மந்திரி அன்பரசனை தூண்டிவிட்டு புலம்ப வைத்திருக்கிறார்கள்.
'கானமயிலாட கண்டிருந்த வான்கோழி, தன் பொல்லா சிறகை விரித்து ஆடியது போல்' தனக்குத் தானே நடிகர் பட்டம் சூட்டிக் கொண்ட உதயநிதி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதை, கருணாநிதியைப் பின்பற்றி அரசியல் நடத்தியவர்களால் ஏற்க முடியவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
திமுக-வின் உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவது எங்களின் நோக்கமல்ல. அடுத்த வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் பழக்கம் தி.மு.க-வினருக்கே உரியது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று தமிழகம் திரும்புவதற்குள் 'ஆந்திராவை' போலவோ, 'மகாராஷ்ட்டிராவைப்' போலவோ அறிவாலயத்தில் உருவாகி அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுவிடுமோ என்று திமுகவினர் அஞ்சுகின்றனர்.
தற்போதைய திமுக எனும் சாக்கடையில் புழுத்த புழுவாக நெளியும் அன்பரசன் என்ற பேர்வழி, மந்திரி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மமதையில், இவனுடைய தலைவரான கருணாநிதியையே வாழ வைத்த எம்.ஜி.ஆர். பற்றியும், அவருடைய அரசியல் வாரிசாகத் திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் பற்றியும் நன்றி கெட்டத்தனமாக விமர்சித்திருப்பது, அதன் தற்குறித்தனத்தைக் காட்டுகிறது.
அண்ணாவின் பெயரால் எம்.ஜி.ஆர். இயக்கம் கண்டபோதும் சரி, அவருக்குப் பின்னால் இந்த இயக்கத்தை ஜெயலலிதா வழிநடத்திய போதும் சரி, கருணாநிதி எத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாரோ, அதையே இப்போது ஸ்டாலினின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் கையில் எடுத்திருப்பது, அவர்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். மறைந்த இருபெரும் தலைவர்களைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்பாக, மாற்றான் மனையில் இருந்து அபகரித்தவர்களைப் பற்றி தெரிந்துகொண்டு பேச வேண்டும். பெற்ற மகளையே பெண்டால நினைத்த சண்டாளர்களின், அழுகிய மூளையிலிருந்து ஒழுகிய சிந்தனைதான் அன்பரசனின் பேச்சு. கற்பூர வாசனை பொதி சுமக்கும் மிருகத்திற்கு தெரியாது.
மறைந்த கருணாநிதியின் உண்மைச் சொரூபம் பற்றி கண்ணதாசன் எழுதிய வனவாசத்தின் பகுதிகளை அச்சிட்டு மக்களிடம் கொண்டு செல்ல எங்களுக்கு நீண்ட நேரம் ஆகாது என்று எச்சரிக்கிறேன். மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வேலையை, கோபாலபுரத்தின் எச்சில் இலைக்கு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையும் அன்பரசன் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.