Ranganayaki : கோவை மேயரானார் ரங்கநாயகி.. ஜெயலலிதா பாணியில் எளியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் திமுக

DMK Councilor Ranganayaki as Coimbatore Mayor : கோவை மேயராக பதவியேற்றுகொண்டார் கவுன்சிலர் ரங்கநாயகி. கோவை மேயர் வேட்பாளருக்கு யாரும் போட்டியிடாத சூழலில் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Aug 6, 2024 - 12:38
Aug 6, 2024 - 13:20
 0
Ranganayaki : கோவை மேயரானார் ரங்கநாயகி.. ஜெயலலிதா பாணியில் எளியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் திமுக
DMK Councilor Ranganayaki as Coimbatore Mayor

DMK Councilor Ranganayaki as Coimbatore Mayor : கோவை மாநகராட்சியின் புதிய மேயராக ரங்கநாயகி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் கோவை மாநகராட்சியின் 7 வது மேயர் என்ற பெருமையும், கோவை மாநகராட்சியின் 2வது பெண் மேயர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். எளிய பொருளாதார பின்னணியை கொண்ட ரங்கநாயகி(Ranganayaki) தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகராட்சியின் மேயரானது எப்படி என்பது சுவாரஸ்ய தகவல்.  

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது. அதில், 73 வார்டுகளில் திமுக நேரடியாக வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் 9 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 4 வார்டுகளிலும், மதிமுக 3 வார்டுகளிலும், கொமதேக 2 வார்டுகளிலும், மமக 1 வார்டிலும் வெற்றி பெற்றது.

அதிமுக 3 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ 1 வார்டிலும் வெற்றி பெற்றது. பின்னர், திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கல்பனா ஆனந்தகுமார், மேயர் பதவிக்கு ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார். இதேபோல திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா ஆனந்தகுமார், மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர். 42 வயதான இவர், கோவை மாநகராட்சி 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார். அப்பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார். எளிய குடும்ப பின்னணியை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார், அப்பகுதியில் இ -சேவை மையம் நடத்தி வந்தார். 

கோவை மாநகராட்சி மேயராக(Coimbatore Coirporation Mayor) பலரும் போட்டியிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு மேயர் பதவி கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பெற்ற பின்னர், அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என புகார்கள் வந்தன. அதேபோல தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கி வந்தார்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மேயர் பங்களாவில் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை செய்ததும், பின்னர் அமானுஷய பயம் காரணமாக அப்பங்களாவில் தங்காமல் விட்டதும் சர்ச்சையானது. மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் சரண்யாவை காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், வீட்டை காலி செய்ய வைப்பதற்காக அழுகிய பொருட்களை வீசுவதாகவும், சமையலறை அருகில் சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும் புகார் எழுந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறை சென்ற போது, சில ஆவணங்களை கல்பனாவின் தம்பி குமார் எரித்தாகவும் புகார் எழுந்தது. பல்வேறு இடங்களில் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பணம் கேட்டதாகவும், ஒப்பந்தாரர்களிடம் மேயர் கல்பனா கமிஷன் கேட்டதாகவும் புகார்கள் வந்தன. செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா ஆனந்தகுமாருக்கும், அமைச்சர் கே.என். நேருவிற்கும் இடையே மோதல்கள் இருந்ததாக தகவல் வெளியானது. 

அதேபோல திமுக கவுன்சிலர்களை அரவணைத்து செல்லாததால், கவுன்சிலர்கள் மேயர் கல்பனாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.மாநகராட்சியில் அதிகாரிகளுடன் கல்பனா மோதல் போக்கை கடைபிடித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் கோவை மாநகராட்சி மேயரை மாற்ற வேண்டுமென திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். கல்பனா ஆனந்தகுமாரின் செயல்பாடுகள் பலருக்கும் அதிருப்தியை தந்தது. இதனையடுத்து கடந்த மாதம் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார் கல்பனா.

மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து அடுத்த மேயராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை மாநகராட்சியின் 29ஆவது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகியின் பெயரை மேயர் வேட்பளராக அறிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு. மேயர் ரேஸில் லிஸ்டிலேயே இல்லாத ரங்கநாயகியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பலரும் அதிருப்தியடைந்தனர். பெரிதும் எதிர்பார்த்த மீனா லோகு(Meena Logu) கண்ணீர் விட்டு அழுதார்.

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகளான நிவேதா சேனாதிபதி மேயர் போட்டியில் இருந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வியும் மேயர் ரேஸில் இருந்தார். ஆசிரியர் பணியை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்த மீனா லோகுவும்  மேயர் ரேஸில் இருந்த நிலையில் ரங்கநாயகியை மேயர்(Ranganayaki Mayor Candidate) வேட்பாளராக அறிவித்தது யாருமே எதிர்பார்க்காதது.

கோவை மேயர் பதவிக்கு(Coimbatore Mayor) மறைமுக தேர்தல் இன்று (ஆகஸ்ட் 06) காலை 10.30 மணிக்கு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் நடந்தது. அப்போது மேயர் வேட்பாளராக ரங்கநாயகி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் போட்டியின்றி ஒருமனதாக கோவை மாநகராட்சியின் புதிய மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார். 

இதன்மூலம் அவர் கோவை மாநகராட்சியின் 7 வது மேயர் என்ற பெருமையும், கோவை மாநகராட்சியின் 2வது பெண் மேயர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். மேலும் ரங்கநாயகி ஒரு மனதாக வெற்றி பெற என்ன காரணம் என்று பார்த்தால் மாநகராட்சியின் திமுகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக கவுன்சிலர்கள் உள்ளன. 100 வார்டுகளில் திமுக கூட்டணிக்கு 96 கவுன்சிலர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிக்கு வெறும் 4 கவுன்சிலர்கள் தான் உள்ளனர். இதனால் எதிர்க்கட்சி சார்பில் மேயர் பொறுப்புக்கு வேட்பு மனு செய்யவில்லை. 

அதேபோல் திமுக மேலிடம் ரங்கநாயகியை மேயர் வேட்பாளராக தேர்வு செய்ததால் அந்த கட்சி மற்றும் கூட்டணி கவுன்சிலர்களும் மேயர் தேர்தலில் வேட்பு மனு செய்யவில்லை. இதனால் போட்டியின்றி ரங்கநாயகி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கணபதி பகுதியை சேர்ந்த இவர், முதல்முறை கவுன்சிலர் ஆனவர். இவர், கோவை எம்.பி., ராஜ்குமாரின் ஆதரவாளராம். அதோடு சிறையில் இருந்தே கச்சிதமாக காய் நகர்த்தி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி பெயரை அறிவிக்க வைத்தாராம் செந்தில் பாலாஜி.

எளிய பொருளாதார பின்புலத்தைக் கொண்ட ரங்கநாயகி தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார். திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மேயர் பதவியை எதிர்பார்த்த நிலையில் ரங்கநாயகிக்கு கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த போது எதிர்பாராத நிலையில் பலருக்கும் பதவி கிடைக்கும். கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் எளிய பின்புலத்தை கொண்டவர்களுக்கு அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவியை கொடுப்பார் ஜெயலலிதா.

திமுகவை பொறுத்தவரைக்கும் கட்சியில் அமைச்சர்களின் வாரிசுகள், காலம் காலமாக பதவியில் இருப்பவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே பதவி கிடைக்கும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மேயர் பதவிக்கு எளிய பின்புலத்தை கொண்ட ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதன் மூலம் ஜெயலலிதா பாணியில் பதவியை தர ஆரம்பித்து விட்டாரா ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow