“அமைச்சரவையில் மாற்றம்... விரைவில் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும்..” முதலமைச்சர் ஸ்டாலின் சூசகம்!
அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அமைச்சரவை மாற்றம் குறித்தும் விளக்கமளித்தார்.
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 17 நாட்கள் அமெரிக்க பயணம் சென்றிருந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பிய அவருக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என். நேரு, எ.வ வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட அரசு உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமெரிக்க முதலீடுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
அப்போது அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக அமைச்சரவை மாற்றம் குறித்து, முக்கியமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது பற்றி செய்திகள் வெளியாகி வருகின்றன. சினிமாவில் நடித்து வந்த உதயநிதி, அப்படியே அரசியலிலும் களமிறங்கினார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவான உதயநிதி, அதன்பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
இதனால் அவருக்கு விரைவில் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது. இதுகுறித்து திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாகவே பேசி வந்தனர். அதேநேரம் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியான எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. முக்கியமாக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் போது, அமைச்சரவை மாற்றம் இருக்கும் என சொல்லப்பட்டது. முதலமைச்சர் தமிழ்நாட்டில் இல்லாதபோது, அரசின் பொறுப்புகளை கவனிக்கும் விதமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது.
அதேபோல், 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்றாக 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவின. அமெரிக்கா செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அப்போது அமைச்சரவை மாற்றம் குறித்தும், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மாற்றம் ஒன்றே மாறாதது, பொறுத்திருந்து பாருங்கள் என்றிருந்தார்.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினிடம், மீண்டும் அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திமுக சொன்னதை தான் செய்யும் செய்வதைதான் சொல்லும். கூடிய விரைவில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழும்” என சூசகமாக கூறினார். சென்னையில் 75வது ஆண்டு திமுக பவள விழா கொண்டாட ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்போது அமைச்சரவை மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?