பாரதிய ஜனதா கட்சியினுடைய உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்ற நிலையில் கோவை, தென் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களின் பொறுப்பாளரும் முன்னாள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுக்க இருக்கின்ற பல்வேறு இடங்களில் கணிசமான உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் நேற்று (அக்.2) நடந்த விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இதற்கு முன் இருந்தே திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவனுக்கு திடீரென்று மது ஒழிப்பு கொள்கையை முன்னெடுப்பது ஆச்சரியமாக உள்ளது. தன் கட்சியை சார்ந்த ஒருவரே இப்படி பேச வைத்து விட்டு அதிக சீட்டுக்காக இந்த மாநாட்டை நடத்துகியுள்ளனர். காந்திய கொள்கை மீது முரண்பாடாக இருக்கும் திருமாவளவன் மது ஒழிப்பை பற்றி பேசுவது எப்படி சரியாகும்?
மேலும் படிக்க: மதுக்கடையை திறந்த திமுகவிற்கு மூடுவதில் என்ன பிரச்சனை? - சீமான் கேள்வி
அரசியல் வாழ்வில் இதுவரை தனி நபர் தாக்குதல் நான் நடத்தியதே இல்லை. திருமாவளவன் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவார் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. மேலும் பாட்டிலை திறக்கிறார் என்று நான் சொல்லவில்லை. அவர்தான் பேசினார். தன் தொண்டர்களுக்கு அகிம்சை வழிக்கு முரணாக திருப்பி அடி என்று கற்றுக் கொடுத்ததும் அவர்தான். அண்ணன் திருமாவளவன் அரசியல் காலத்தில் இதுவரை பேசிய உரையில் நேற்று பேசியது அவர் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளி” எனத் தெரிவித்தார்.