Bihar Hospital Doctor Rape Attempt Female Nurse : இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பீகாரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற மருத்துவருக்கு, பிளேடால் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் பெண் செவிலியர் ஒருவர்.
பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சஞ்சய் குமார் சஞ்சு, சுனில் குமார் குப்தா, அவதேஷ் குமார் ஆகியோர் மருத்துவர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் மூவரும் மது அருந்திவிட்டு போதையில் மருத்துவமனையில் பணி செய்ய சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் செவிலியரை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. முதலில் மருத்துவர் சஞ்சு, அந்த பெண் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செவிலியர், தன்னை பாதுகாத்து கொள்வதற்காக அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் பிளேடை எடுத்து, மருத்துவரின் அந்தரங்க உறுப்பை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து மருத்துவர்கள் சுனில், அவதேஷ் ஆகியோரும் அந்த செவிலியரை துரத்திச் சென்றுள்ளனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிச் சென்ற செவிலியர், 112 என்ற அவசர எண்ணுக்கு தொடர்புகொண்டு காவல்துறைக்கு புகாரளித்தார். இதனையடுத்து எஸ்பி வினய் திவாரி தலைமையிலான போலீஸார், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனர். மேலும், மருத்துவர்கள் மூவரையும் அதிரடியாக கைது செய்த போலீஸார், சம்பவ இடத்தில் இருந்து ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
அதேநேரம் காயமடைந்த மருத்துவர் தற்போது மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை எடுத்து வருகிறார். மதுவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தில், மருத்துவர்கள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டிருந்ததும் கடும் சர்ச்சையாகியுள்ளது. மருத்துவமனையை உள்பக்கமாக பூட்டிவிட்டு, சிசிடிவி கேமராவை ஆஃப் செய்த பின்னரே செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர் மருத்துவர்கள். பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற மருத்துவருக்கு, பிளேடால் செவிலியர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.