World Health Organization Approved Monkey Pox Vaccine : கடந்த சில ஆண்டுகளாக புதுப்புது வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பது குரங்கம்மை. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட குரங்கம்மை தொற்று, இப்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. குரங்கம்மைக்கு 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளதால் உலக சுகாதார மையமும் விழித்துக் கொண்டுள்ளது.
குரங்கம்மை நோய்(Monkey Pox) குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி உலக நாடுகள் அனைத்துக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக மக்களுக்கு புதிய வில்லனாக உருவெடுத்துள்ள குரங்கம்மை, இந்தியாவிலும் தனது கொடூர கால்களை பதித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்தது.
அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. பரிசோதனையின் முடிவில் அந்த இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், 'இளைஞருக்கு கிளாட் 2 வகை தொற்று பாதிப்பு தான் கண்டறியப்பட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்துள்ள வகைப்பாட்டைச் சேர்ந்தது இல்லை. அந்த நபர் நலமுடன் உள்ளார். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை’என்று கூறியிருந்தது.
மேலும் 'இந்தியாவில் யாருக்கும் குரங்கம்மை தொற்று கண்டறியப்படவில்லை. ஆனாலும் மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவ பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் அவரச சிகிச்சை பிரிவுகளை (ICU) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ பணியாளார்களுக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களையும் தனிமைப்படுத்துவது அவசியமாகும்'' என்றும் மாநிலங்களுகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில், குரங்கம்மையை கட்டுப்படுத்த தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பவேரியன் நோர்டிக் ஏ/எஸ் (Bavarian Nordic A/S)என்ற நிறுவனம் Jynneos என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. பலகட்ட பரிசோதனைகளுக்கு பின்பு இந்த தடுப்பூசியை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு தலையசைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ்களாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லை. அதே வேளையில் குழந்தைகள் உள்ளிட்ட 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு அதிகமாக இருந்தால் இந்த தடுப்பூசி செலுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக குரங்கம்மை ஆதிக்கம் அதிகம் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் Jynneos தடுப்பூசி போடப்பட உள்ளது. அதன்பிறகு மற்ற நாடுகளில் குரங்கம்மையின் வீரியத்தை பொறுத்து அங்கு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.