Taslima Nasrin Condemns Bangladesh Sheikh Hasina : வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும். திறமையின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மாணவர்களும், ஆளும் கட்சியான அவாமி லீக்குக்கு ஆதரவான மாணவர்களும் ஒருவரை ஒருவர் கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 2 நாட்களாக வன்முறை தீவிரம் அடைந்ததால் வங்கதேச பிரதமர் ஷேக்ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
ஷேக் ஹசினா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தனது சகோதரி லண்டன் குடியுரிமை வாங்கி வைத்திருப்பதால், ஷேக் ஹசினா லண்டன் சென்று நிரந்தமாக குடியிருக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தின் பெண்ணுரிமை போராளியும், பிரபல எழுத்தாளருமான தஸ்லிமா நஸ்ரின்(Taslima Nasrin), ஷேக் ஹசினாவை மிக கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''வங்கதேசத்தில் மரண படுக்கையில் உள்ள எனது தாயை நான் பார்க்க சென்றபோது, ஷேக் ஹசினா 1999ம் ஆண்டு இஸ்லாமியர்களை மகிழ்விப்பதற்காக என்னை நாட்டை விட்டு வெளியேற்றினார். மீண்டும் என்னை நாட்டுக்குள் நுழைய விடவே இல்லை. மாணவர்கள் அமைப்பில் உள்ள அதே இஸ்லாமியர்கள் இன்று ஷேக் ஹசினாவை வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், ஷேக் ஹசினாவை குற்றம்சாட்டுவதற்கு பின்னால் மிகப்பெரும் காரணம் உள்ளது. 1962ம் ஆண்டு பிறந்த தஸ்லிமா நஸ்ரின், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பெண்ணியத்துக்கு ஆதரவாக ஏராளமான புத்தகங்கள் எழுதினார். மிக முக்கியமாக, வங்கதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் அடக்கு முறையை கையாண்டு வருவதாக கூறிய அவர் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் சில விஷயங்களை கடுமையாக சாடினார்.
மேலும் குட்டையாக முடி வெட்டிக் கொண்டும், புகைப்பிடிப்பவராகவும், நாத்திகவாதியாகவும் தன்னை வெளிக்காட்டிய தஸ்லிமா நஸ்ரினிக்கு வங்கதேச முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. தஸ்லிமா நஸ்ரின் எழுதிய புத்தகங்களை விற்பனை செய்த கடைகளை சில இஸ்லாமிய அமைப்புகள் அடித்து நொறுக்கின. மேலும் தஸ்லிமா நஸ்ரிக்கும் தொடர் கொலை மிரட்டல்கள் விடுத்தன.
தஸ்லிமா நஸ்ரினுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளும், அவரது உயிருக்கு அச்சுறுத்தலும் நிலவியதால் 1999ம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அரசு தஸ்லிமா நஸ்ரினை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இதனால் தஸ்லிமா நஸ்ரின் சில ஆண்டுகள் அமெரிக்காவிலும், சில ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தார். 2024ம் ஆண்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்த அவர் கொல்கத்தாவில் சில காலம் இருந்தார். அங்கு அவருக்கு எதிர்ப்பு வந்ததால் அதன்பிறகு டெல்லிக்கு இடம்பெயர்ந்து அங்கு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.