100 கோடி நில மோசடி.. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தை .. இன்ஸ்பெக்டர் கைது.. சிபிசிஐடி அதிரடி!

எம்.ஆர். விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

Jul 17, 2024 - 09:20
Jul 18, 2024 - 10:22
 0
100 கோடி நில மோசடி.. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தை .. இன்ஸ்பெக்டர் கைது.. சிபிசிஐடி அதிரடி!
Police inspector Prithviraj arrested

கரூர்: கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் மற்றும் அதே மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  கரூர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தனர். 

அதாவது 'கரூர் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர்' என்று கூறி இருந்தனர். 

இந்த புகார்களின் பேரில் வாங்கல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் எனக்கருதி எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார். சிபிசிஐடி போலீசார் அவரை வலைவீசி தேடி வந்த நிலையில், கேரள மாநிலம் திரிச்சூரில் தலைமறைவாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை நேற்று போலீசார் கைது செய்தனர். எம்.ஆர். விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வந்தனர். 

ஆனால் முன்னாள் அமைச்சர் கேரள எல்லையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்த எம்.ஆர். விஜயபாஸ்கர், வேறு ஒரு எண்ணில் ஆன்லைன் மூலமாக பேசி வந்தததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் உறவினருக்கு ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது , அந்த நெட்வொர்க்கை வைத்து திரிச்சூரில் அவர் இருக்கும் இடம் அறிந்து அங்கு சென்று போலீசார் கைது செய்தனர்.

பின்னர் சிபிசிஐடி போலீசார் அவரை கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதன்பிறகு எம்.ஆர். விஜயபாஸ்கரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினார்கள். எம்.ஆர். விஜயபாஸ்கரை வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நிலமோசடி வழக்கில்  எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது,  எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் தொடர்புடைய நிலம் தொடர்பான ஆவணங்கள் தொலைந்து போனதாகவும், அதை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும்  சான்றிதழ் அளித்ததாக புகார் அளிக்கப்பட்டு, அதன்பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow