Aadi Perukku 2024 : தாய்மாமன்கள் தினம்.. ஆடி பதினெட்டில் கொண்டாட்டம்.. உசிலம்பட்டியில் பொங்கிய உற்சாகம்

Aadi Perukku 2024 Day Celebration in Usilampatti : உசிலம்பட்டி அருகே தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமனை போற்றும் விதமாக ஆடி 18 ஆம் பெருக்கு தினத்தை தாய்மாமன் தினமாக உசிலம்பட்டி பகுதி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Aug 3, 2024 - 16:39
Aug 3, 2024 - 16:58
 0
Aadi Perukku 2024 : தாய்மாமன்கள் தினம்.. ஆடி பதினெட்டில் கொண்டாட்டம்.. உசிலம்பட்டியில் பொங்கிய உற்சாகம்
Aadi Perukku 2024 Day Celebration in Usilampatti

Aadi Perukku 2024 Day Celebration in Usilampatti : தொப்புள் கொடி உறவுக்கு அடுத்தபடியாக தொட்டில் முதல் மணமேடை வரை தொடரும் ஒரு உறவு உண்டு என்றால் அது தாய்மாமன் உறவுதான். தமிழகத்தில் தாய்மாமன் உறவை போற்றுவதைப் போல வேறு எங்கும் கொண்டாடி மகிழ்வதில்லை. தாய்மாமன்களை போற்றும் விதமாக ஆடி பதினெட்டாம் தேதியான இன்று தாய்மாமன்கள் தினமாக கொண்டாடுகின்றனர். உசிலம்பட்டியை அடுத்த  கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்ப சாமி கோவிலில்  தாய்மாமன்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து ஆசி பெற்றனர்.

தாய்மாமன் யார்?

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான்.உறவுகளில் மிகச் சிறந்த உறவு தாய்மாமன் என்று அடித்துச் சொல்லலாம்.தாய்மாமன்களின் உறவு பற்றி கிழக்குச் சீமையிலே படத்தில் மூச்சு விடாமல் பேசுவார் விஜயகுமார்.

தாய்மாமனின் சிறப்புகள்

தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் சீனிப்பாலை குழந்தைக்கு முதல் உணவாக அளிப்பதில் துவங்கி, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமண விழா மற்றும் இறுதியாக இறந்த பின்னும் தாய்மாமன் கொடியாக ஒரு செம்பு நீரை இறந்த உடலுக்கு ஊற்றி இறுதி மரியாதை செய்த பின்பே நல்லடக்கம் நடைபெறும், என்ற வகையில் சகோதரியின் இன்ப, துன்பத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு தாய்மாமன் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.இதற்காக அவர் தன் உழைப்பில் சேகரிக்கும் 70% பணத்தையும் சீதனமாக கொடுக்கிறார்.

விதை நெல் சீர்வரிசை

இந்த ஆடி மாதத்தில் வரும் ஆடி பெருக்கு பண்டிகையின் போது தனது விதை நெல்மணியையும் தங்கை குழந்தைகள் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சீதனமாக அளிப்பது வரலாறு, இந்த தாய்மாமன் பங்களிப்பை அறிந்த பெண்கள் யாரும் சொத்திற்காக சண்டையிடுவது இல்லை எனவும் தாய்மாமன் செய்யும் சீதனமே போதும் என பெருமையோடு அவர்களை வணங்குவார்கள் என கூறப்படுகிறது.

8வது ஆண்டாக கொண்டாட்டம்

அவ்வாறு தாய்க்கு நிகராக உள்ள இந்த தாய்மாமனை போற்றும் விதமாக ஆடி 18 தினத்தில் தனது மொத்த பங்களிப்பையும் தரும் தாய்மாமனுக்கு மரியாதை செய்து, அவர்களிடம் ஆசி வாங்கும் மருமகன்கள், அவர்களை வணங்கி தானியங்களை வழங்கி வருகின்றனர்.கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த திருவிழா இன்று எட்டாவது ஆண்டாக  உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்ப சாமி கோவிலில் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தாய்மாமன்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து, தாய்மாமனிடம் தானியங்களை மருமகன்மார்கள் பெற்று ஆடி பெருக்கில் விதை விதைப்பிற்காக எடுத்து சென்றனர்.

தங்க தமிழ்ச் செல்வன்

இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்களும், தேனி மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், தென்னிந்திய பார்வட் ப்ளாக் தலைவர் திருமாறன் மற்றும் பார்வட் ப்ளாக் கட்சி தலைவர்களும் பங்கேற்று தங்களது தாய்மாமன்களுக்கு மரியாதை செய்து ஆசி பெற்றனர்.

தாய்க்கு நிகரான உறவு

சகோதரிக்கு பிறந்த பிள்ளையை திருமணம் செய்து கொடுக்கும் போது தாய்மாமன் சம்மதம் சொன்னால்தான் நிச்சயமே நடக்கும். அந்தளவுக்கு தாய்மாமன் உறவு வலுவானது. தாய்மாமன் வீட்டு சீதனம் முக்கியமானது. எத்தனையோ பேர் சீர் செய்தாலும் ஊர் மெச்ச தாய் மாமன் செய்யும் சீர்தான் சபையை நிறைக்கும். எத்தனையோ சொந்தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்தாலும் தாய்மாமன் வந்தால்தான் வீடு நிறையும். சும்மாவா சொன்னாங்க தாய் மாமன் உறவுங்கிறது தாய்க்கு சமமான உறவு என்று. தாய்மாமனை போற்றும் அனைவருக்கும் இனிய தாய் மாமன் தின நல் வாழ்த்துக்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow