குதிகால் வலி.. ஊசியாக குத்தும் கால் வலியை வீட்டிலேயே சரி செய்ய ஈஸி டிப்ஸ்

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குதிகால் வலி, இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீதச் சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்குவதால் குதிகால் வலி வரும்.

Aug 7, 2024 - 16:08
 0
குதிகால் வலி.. ஊசியாக குத்தும் கால் வலியை வீட்டிலேயே சரி செய்ய ஈஸி டிப்ஸ்
heal pain home remedies


தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இந்த பாதிப்பு வரலாம்.  அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்பு அதிகம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்தப் பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது  குதிகாலில் வலி ஏற்படும். குதிகால் பிரச்சினை தீர என்ன சாப்பிடலாம்? எளிமையான முறையில் குதிகால் வலியை எப்படி போக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பார்க்கலாம்.

குதிகால் வலி யாருக்கு வரும்: 

நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்றைய பெண்களில் பலரும் ஹைஹீல்ஸ் செருப்புகளை அணிகின்றனர். இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும். 

என்ன பயிற்சி செய்யலாம்:

உடல் பருமன் இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்குப் பாரம் குறைந்து வலி சீக்கிரத்தில் விடைபெறும்.
பிசியோதெரபியும் இந்த வலியைப் போக்க உதவும்.  லேசர் சிகிச்சையும் குதிகால் வலியைப் போக்கும் சிறந்த பிசியோதெரபி சிகிச்சைகள்.
குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். சைக்கிளிங் பயிற்சி குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி.  முன் பாதத்தில் அழுத்தம் கொடுத்துப் பெடல் செய்வதால், மொத்தப் பாதத்துக்குமே ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வலி குறையும்.

ரத்த ஓட்டம் அவசியம்: 

குதிகால் வலி தீர காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு போட்டு இரண்டு பாதங்களையும் 5 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரணத் தண்ணீரில் 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறிக் மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும்.  குதிகால் வலி குறையும். இதைப் பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும். அப்போதுதான் வலிக்கு நிரந்தரமான நிவாரணம் கிடைக்கும்.

கால்வலி பிரச்சினை தீர: 

குதிகாலுக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும், சிலருக்குக் குதிகால் வலி ஏற்படும். வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம். அப்படியும் வலி எடுத்தால், காலையில் எழுந்த உடனேயே கால்களைத் தரையில் வைக்கக் கூடாது. கால் விரல்களைச் சிறிது நேரம் நன்றாக உள்ளே மடக்கிப் பிறகு விரியுங்கள். கெண்டைக்கால் தசைகளையும், இதுபோல் மடக்கி விரியுங்கள். இதனால் அந்தப் பகுதிக்குப் புது ரத்தம் அதிகமாகப் பாயும். 


என்ன சாப்பிடலாம்:

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், நீங்களாகவே கடையில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். இவற்றால் பக்க விளைவுகள் ஏற்படும். 
கால்சியம் சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலும் கால்சிய குறைபாடும் ஏற்படும். இதனால் கால் வலி வரலாம். ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு எலும்பு பாதிப்பு ஏற்படுவது குறைவு. போதுமான வைட்டமின் டி, கால்சியம் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது எலும்புகள் வலிமைக்கு உதவும். பால், யோகர்ட், சீஸ், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலே உள்ளிட்ட கால்சியம் சத்துக்கள் கொண்ட உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.  

சரியான செருப்பு: 

குதிகால் வலி உள்ளவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது.  எம்சிஆர் செருப்புகளை அணிந்து நடக்கலாம். சரியான அளவில் செருப்புகளை அணிய வேண்டும். எப்போதும் மிருதுவான ஹவாய் செருப்புகளை அணிந்து நடக்க வேண்டும். லூசான ஷூக்களையும் அணியக்கூடாது என்பதும் மருத்துவர்களின் ஆலோசனையாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow