சினிமா

Priya Bhavani Shankar: இந்தியன் 2 தோல்வி... ராசியில்லாத நடிகை..? பிரியா பவானி சங்கர் கூல் ரிப்ளே!

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 தோல்வியை சந்தித்தது. பிரியா பவானி சங்கர் நடித்ததால் இந்தப் படம் தோல்வியடைந்ததாகவும், அவர் ராசியில்லாத நடிகை என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். இதுகுறித்து பிரியா பவானி சங்கர் ரொம்ப கூலாக பதில் கூறியுள்ளார்.

Priya Bhavani Shankar: இந்தியன் 2 தோல்வி... ராசியில்லாத நடிகை..? பிரியா பவானி சங்கர் கூல் ரிப்ளே!
Priya Bhavani Shankar about Indian 2 Failure

சென்னை: தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து திரையுலகில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை, ஜோடி நம்பர் 1 என சின்ன திரையில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்தவர், மேயாத மான் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படமே பிரியா பவானி சங்கருக்கு நல்ல அறிமுகம் கொடுத்ததால், அடுத்தடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் கார்த்தியுடன் நடித்த கடைக்குட்டி சிங்கம், எஸ்ஜே சூர்யா ஜோடியாக நடித்த மான்ஸ்டர் என இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

ஆனால், அதன்பின்னர் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரியளவில் வெற்றிப் பெறவில்லை. ஓ மணப்பெண்ணே மட்டும் ஓரளவு ரீச் ஆனது. இந்நிலையில், கமல், ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து ‘தாத்தா வர்றாரு கதறவிடப் போறாரு’ என கெத்தாக ஆட்டம் போட்டிருந்தார் பிரியா பவானி சங்கர். 5 ஆண்டுகளாக பல தடைகளை கடந்து வெளியான இந்தியன் 2 மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தாண்டின் மிகப் பெரிய தோல்விப் படமாக இந்தியன் 2 அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தியன் 2 தோல்விக்கு பிரியா பவானி சங்கர் தான் காரணம் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதாவது பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகை என்றும், அவர் நடிக்கும் படங்கள் வெற்றிப் பெற வாய்ப்பே இல்லை எனவும் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.

தொடர்ந்து பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகை என்ற ட்ரோல்கள் வைரலாக, அதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அவர். சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்த பிரியா பவானி சங்கரிடம், இந்த ட்ரோல்கள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், இந்தியன் 2 தோல்விக்கு நான் எப்படி காரணமாக முடியும். இந்தியன் 2 மட்டுமல்ல, எல்லா படங்களும் வெற்றிப் பெற வேண்டும் என்றே அந்தந்த படக்குழுவினர் விரும்புவார்கள். கமல்ஹாசன், ஷங்கர் போன்ற ஜாம்பவான்கள் இணையும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது எப்படி மறுக்க முடியும். என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்படியான வாய்ப்புகள் அமைவதெல்லாம் பெரிய விஷயம். அப்படி கிடைத்தால், அதில் நடிக்கவே ஆசை வரும்.

மேலும் படிக்க - விஜய்யின் கோட் ஒன்லைன் ஸ்டோரி

நானும் அப்படித்தான் இந்தியன் 2 படத்தில் நடித்தேன். ஆனால், அது தோல்வியடையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியன் 2 எனது படம் கிடையாது, அது கமல்ஹாசன் சார் மூவி, ஷங்கர் இயக்கியுள்ளார். அதனால் இந்தியன் 2 தோல்வி என்னை ஒருபோதும் பாதிக்காது. இப்போது இந்தியன் 2 ரிசல்ட்டை பார்த்த பின்னர், மீண்டும் அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஓக்கே தான் சொல்வேன். ஷங்கர் சார் டைரக்ஷனில், கமல்ஹாசன் செலக்ட் செய்த ஒரு கதையில் எனக்கும் ஒரு ஸ்பேஸ் இருக்கும் போது, அதனை எப்படி மிஸ் செய்ய முடியும் என்றுள்ளார்.

அதேபோல், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படங்கள் வெற்றிப் பெற்ற போது, அதற்கு காரணம் நான் தான் என என்னை கை காட்டவில்லை. ஆனால், படம் தோற்றால் மட்டும் பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகை என சொல்வது எந்த வகையில் நியாயம் என அவர் கேட்டுள்ளார். அதேபோல், ரஜினி, கமல், விஜய் எல்லோருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அவர்களது எல்லா படங்களும் வெற்றிப் பெறுவதில்லை எனவும் பிரியா பவானி சங்கர் கூலாக ரீப்ளே செய்துள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.