தமிழ்நாடு

Rain Update: குடை எடுத்தாச்சா...? மழை வெளுத்து வாங்கப்போகுது மக்களே!

தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Update: குடை எடுத்தாச்சா...? மழை வெளுத்து வாங்கப்போகுது மக்களே!
தமிழ்நாடு மழை அப்டேட்

சென்னை: இது ஆக்ஸ்ட்  மாதமா இல்லை கோடை காலமா என  தமிழ்நாட்டு மக்களே குழம்பி போய் இருக்கும் வகையில் கடந்த சில தினங்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இப்படி வெயிலால் நொந்து போய் இருக்கும் மக்களை குஷிபடுத்தும் விதமாக சில்லுன்னு ஒரு மழை அப்டேட் கொடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று (ஆகஸ்ட் 19) முதல் வரும் 24ம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

அதன்படி இன்று (ஆகஸ்ட் 19)  தமிழகத்தின் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடையை எடுக்காமல் வெளியே செல்ல வேண்டாம்.

அதிலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆகஸ்ட் 19ல் இருந்து 22ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரி கடலிலும், மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இவ்வளவு நாள் வெயிலுக்கு பயந்து குடை, பழச்சாறு என பல முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு வந்த தமிழக மக்கள், தற்போது ”மழை + பஜ்ஜி + இளையராஜா = வைப்” என ஸ்டேடஸ் வைத்து வைப் செய்ய தயாராகலாம்.