Manu Bhaker Coach Samaresh Jung Notice : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து வருகின்றன. ஜூலை 26ம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். நமது இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இதில் 2 வெண்கல பதக்கத்தை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.
3வது பதக்கத்தை 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தியாவுக்கு கிடைத்த 3 பதக்கங்களில் 2 பதக்கத்தை மனு பாக்கர் கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மனு பாக்கருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அவரது பயிற்சியாளரான சமரேஷ் ஜங்கின் வீடு 2 நாட்களில் இடிக்கப்படும் என அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனு பாக்கர் 2 பதக்கங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் 56 வயதான சமரேஷ் ஜங். ஏனெனில் இவர் தேசிய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
சமரேஷ் ஜங்கின் வீடு டெல்லியில் உள்ள கைபர் பாஸ் காலனி பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பாரீஸில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு, ''உங்கள் வீடு இடிக்கப்பட உள்ளது இன்னும் 2 நாட்களில் நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்'' என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சமரேஷ் ஜங், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று முறையிட்டுள்ளார். அப்போது கைபர் பாஸ் காலனி பகுதி பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமானது. ஆகவே இங்கு கட்டடங்கள் கட்டியது சட்டவிரோதமானது என்பதால் வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இது குறித்து வேதனையுடன் தெரிவித்த சமரேஷ் ஜங், ''நாங்கள் இந்த பகுதியில் 75 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். உரிய முறையில் வாடகை செலுத்தி வருகிறோம். ஆனால் இங்கு வசிப்பது சட்டவிரோதம் எனக்கூறி எங்கள் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, நாங்கள் குடியிருப்பது பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்றால் வீடுகளை காலி செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் 2 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்தால் எப்படி?'' என்று கூறியுள்ளார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளராக இருக்கும் சமரேஷ் ஜங், முன்னாள் துப்பாக்கிச்சுடும் வீரர் என்பதும் இவர் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய பயிற்சியாளர், முன்னாள் வீரர் என்றும் பாராமல் சமரேஷ் ஜங்குக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.