Former BJP MP Gyan Dev Ahuja on Wayanad Landslide : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டிய கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து படுபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள், அங்கு இருந்த பள்ளிகள்,சிறு சிறு வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன.
வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதையுண்டு தூக்கத்திலேயே உயிரை பறிகொடுத்தனர். மேலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்து தோண்டத் தோண்ட சடலங்கள் மீட்கப்பட்டு வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் இன்று தொடர்ந்து 5வது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும் துயரத்தில் சிக்கித் தவிக்கும் கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகள், பல்வேறு மாநில மக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
பல்வேறு மாநில நடிகர்கள் மற்றும் மக்கள் கேரளாவுக்கு தங்களால் முடிந்த பண உதவி, பொருள் உதவி செய்து வருகின்றனர். இது தவிர வயநாடு மக்கள் பேரிடரில் இருந்து விரைவில் முழுமையாக மீள வேண்டும் என்று இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் என மத வேறுபாடின்றி அனைவரும் தங்களின் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க, கேரளாவில் பசுக்களை கொல்வதால்தான் இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன என்று பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கியான் தேவ் அஹுஜா என்பவர், ''கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பசுவதை (பசுக்களை கொல்லுதல்) செய்யும் இடங்களில் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நடந்து வருவதை தெளிவாக பார்க்க முடிகிறது. கேரளாவில் பசுக்களை கொல்வதை நிறுத்தவில்லை என்றால் இதுபோன்ற பேரிடர்கள் தொடர்ந்து நடக்கும்'' என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, கேரளாவில் மாட்டி இறைச்சி சாப்பிடுபவர்கள் அதிகம். இதை வைத்து பாஜகவின் மூத்த தலைவர் கியான் தேவ் அஹுஜா கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ''நிலச்சரிவில் வயநாடு மக்கள் தங்கள் குடும்பத்தை இழந்து பரிதவித்து வரும் நிலையில், பாஜக தலைவர் மிகவும் கேவலமான ஒரு கருத்தை கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கூட செய்ய வேண்டாம். இதுபோன்று பொறுப்பற்ற முறையில் பேசாமல் இருந்தாலே போதும்'' என்று பல்வேறு தரப்பினரும் பாஜக தலைவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மக்கள் மனது புண்படும்வகையில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் கியான் தேவ் அஹுஜா மீது மாநில காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.