Seeman : வயநாடு போனீங்களே.. தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு வந்தீங்களா? - ராகுலுக்கு சீமான் கேள்வி

Seeman on Rahul Gandhi Wayanad Visit : வயநாடுக்குச் சென்ற ராகுல் காந்தி தூத்துக்குடி, திருநெல்வேலி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழகத்திற்கு ஏன் வரவில்லை என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Aug 3, 2024 - 15:20
Aug 3, 2024 - 16:12
 0
Seeman : வயநாடு போனீங்களே.. தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு வந்தீங்களா? - ராகுலுக்கு சீமான் கேள்வி
ராகுல் காந்திக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி

Seeman on Rahul Gandhi Wayanad Visit : சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை(Dheeran Chinnamalai) 219-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்...

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “வயநாடு ஏற்பட்ட பேரிடர் மிகப்பெரிய துயரம். அதில், நாம் பங்கேற்கிறோம். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஓடி வந்து பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். உங்களுடைய தொகுதி என்பதால் நிவாரண நிதியை அறிவிக்கிறீர்கள். ஆனால் தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது, எங்களை யாரும் வந்து பார்த்தீர்களா?

எங்கள் ஓட்டு வேண்டும். எங்களது 10 சீட்டு வேண்டும். ஆனால் எங்களது உயிரைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. இந்தியா எங்களை இந்தியனாக ஏற்கிறதா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை ஒவ்வொருவராக சென்று பார்த்தீர்கள். ஆனால், மீனவர்களை சென்று யாராவது பார்த்தீர்களா?

வடமாநிலத்தில் ஒரு மீனவன் கொல்லப்பட்டதும் ராணுவத்தை குவித்து போர் பதற்ற சூழல் அளவுக்கு பாதுகாப்பு கொடுத்தீர்கள். ஆனால், இங்கு நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டும் யாரும் கண்டு கொள்வதில்லை. அவ்வளவு தான் எங்களது உயிருக்கும் மதிப்பு”.

“கருணாநிதி என்பவர், கங்காரு குட்டியை போல் தன் வயிற்றில் ஸ்டாலினை சுமந்து வந்தார். தற்போது ஸ்டாலின் தன்மகனை சுமந்து வந்து இறக்கி விடப் போகிறார். நீங்கள் எங்களைப்போல் தானாக உருவான காட்டு மரமா? நீங்கள் உருவாக்கப்படுகிறீர்கள். நாங்கள் உருவாக்கி வருகிறோம். எந்த தகுதியின் அடிப்படையில் உங்களுக்கு நீங்களே முடிசூடி கொள்கிறீர்கள்.

ரெட் பிக்ஸ் வலையொலியை மூடுவது நியாயமல்ல.. அரசுக்கு ஆதரவாக பேசும் வலையொளிக்கு ஆதரவாக செயல்படுவது நியாயமா?. அரசை எதிர்த்து வீடியோ பதிவிட்டால் குண்டர் சட்டம் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது”

“தமிழ்நாட்டில் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளது.. தமிழ்நாட்டில் நடைபெறும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்காது என அமைச்சர் ரகுபதி கூறுவது பொறுப்பற்ற தனத்தை காட்டுகிறது, 99 சதவீத குற்றங்கள் போதையாலயே நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்காது எனக் கூறுவதற்கு அமைச்சர் தேவையா, அரசு தேவையா?

தமிழ்நாட்டில் இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவது தேவையா? அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கலாம். ஆனால், அதற்காக விளையாட்டாக இருக்கக் கூடாது.. கார் ரேஸ் நடத்தினால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துவிடுமா? எதை எந்த நேரத்தில் செய்வதென்றே தெரியவில்லை.

எதிர்க்கட்சிகளோடு கூட்டணி குறித்த கேள்விக்கு, எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமே இல்லை. எப்போதும் தனித்து தான் போட்டியிடுவேன். காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை காணவில்லை என்ற செய்தியை கேட்டதும் வடிவேலு கிணற்றை காணவில்லை எனக் கூறும் காமெடித்தான் ஞாபகத்திற்கு வந்தது” எனக் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow