வெளிநாடுகளில் தமிழர்களை சைபர் கிரைம் மோசடிகளுக்கு பயன்படுத்தும் கும்பல்.. அதிர வைக்கும் தகவல்!
இளைஞர்களை மோசடி செய்து வெளிநாட்டிற்கு சைபர் கிரைம் அடிமைகளாக மாற்ற மோசடி கும்பலை சேர்ந்தவர்களே நேரடியாக களத்தில் இறங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட்களை கடத்திச் செல்லும் சம்பவம் நிகழ்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை: உலக அளவில் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பறிப்பதற்காக சர்வதேச மோசடி கும்பல்கள் கம்போடியா, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அடுக்குமாடி கட்டட வணிக வளாகங்களில் அலுவலகம் நடத்தி மிகப்பெரிய சைபர் கிரைம் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். அதிலும் இந்தியாவில் உள்ளவர்களை ஏமாற்றுவதற்காக, வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என ஆசை வார்த்தை காட்டி இந்திய இளைஞர்களை ஆட்கடத்தல் செய்து சைபர் கிரைம் அடிமைகளாக நடத்தி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு தரகர்கள் உடந்தையாக இருந்து கொண்டு பல இளைஞர்களை வெளிநாட்டு வேலை ஆசை காட்டி கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏமாற்றி அனுப்பிய விவகாரம் தெரிய வந்தது. இதில் பல்வேறு தமிழர்களும் சைபர் கிரைம் அடிமைகளாக சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சிபிசிஐடி 9 வழக்குகள் பதிவு செய்து தொடர்புடைய பத்து தரகர்களை கைது செய்தனர். வெளிநாட்டில் சைபர் கிரைம் அடிமைகளாக சிக்கிக்கொண்ட தமிழர்கள் 186 பேரை இதுவரை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட தமிழர்கள் மூலம் விசாரணை நடத்தி தொடர்புடைய தரகர்களை அடுத்தடுத்து கைது செய்யும் நடவடிக்கையிலும் சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் போலீசார் துடிப்புடன் செயல்படுவதை அறிந்து சர்வதேச சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையை தற்போது கையாண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சர்வதேச மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் நேரடியாக சிலர் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இளைஞர்களை மோசடி செய்து வெளிநாட்டிற்கு சைபர் கிரைம் அடிமைகளாக மாற்ற மோசடி கும்பலை சேர்ந்தவர்களே நேரடியாக களத்தில் இறங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட்களை கடத்திச் செல்லும் சம்பவம் நிகழ்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
படித்து வேலை தேடும் இளைஞர்களின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நேரடியாக வாட்ஸ் அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பி கம்போடியா தாய்லாந்து மியான்மர் போன்ற நாடுகளுக்கு ஆட்களை கடத்திச் செல்கின்றனர். குறிப்பாக இலவச சுற்றுலா என்ற பெயரில் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளை அனுப்பி இந்த மோசடி கும்பல் பல இளைஞர்களை தாய்லாந்து கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு வரவழைத்து சிறைபிடிப்பது தெரிய வந்துள்ளது. இலவசமாக தாய்லாந்து போன்ற நாடுகளை சுத்தி பார்க்க வாய்ப்பு கிடைப்பதாக நம்பி பலரும் இந்த வலையில் விழுந்து சைபர் கிரைம் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.
இந்த விவகாரத்தில் தீவிரமாக களமிறங்கிய போலீசார், வாட்ஸ் அப் எண்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை சைபர் கிரைம் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து அந்த கும்பலை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சர்வதேச மோசடி கும்பல் தரகர்கள் மட்டுமின்றி வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலமாக இலவச சுற்றுலா எனக் கூறி மோசடி செய்து ஆட்களை கடத்துவதோடு மட்டுமல்லாது, வெளிநாட்டில் வேலை என்ற அடிப்படையிலும் குறுஞ்செய்தி அனுப்பி ஆட்களை கடத்துகின்றனர். இளைஞர்கள் மத்தியில் நம்ப வைப்பதற்காக வடமாநிலங்களில் நேர்காணல்கள் நடத்துவதும் தெரிய வந்துள்ளது.
இந்த நேர்காணல்களை உண்மை என்று நம்ப வைப்பதற்காக வேண்டுமென்றே சில இளைஞர்களை நேர்காணல்களுக்கு வரவழைத்து வேலைக்கு எடுக்காமல் ரிஜெக்ட் செய்தும் அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே வாட்ஸ் அப் மூலமாக வெளிநாட்டில் வேலை மற்றும் இலவச சுற்றுலா என வரும் குறுஞ்செய்தியை நம்பி யாரும் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?