சிவகங்கை மாவட்டம் ஆதனூர் கிராமம் கீழப்பசலை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர், வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை செழிக்க வைக்கிறது. சிவகங்கை மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் சுமார் 400 க்கு மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தினை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அதனால், நீதிமன்ற உத்தரவிட்ட படி, ஆதனூர் கண்மாய்க்கு நீர் நிரப்பி விவசாயத்தை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மதுரை வைகை ஆற்றின் கரையோரம், மாநாகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் குடியிருப்போர், வைகை ஆற்றில் கழிவுகளை கொட்டி செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் இருப்பது போல் அடிப்படை கடமைகளும் உள்ளன. வைகை ஆற்றில், வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி சுத்தம் செய்கின்றனர். குப்பை கொட்டுகின்றனர். இதை நான் நேரில் பார்த்தேன். குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்று நீரை மாசு படாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பினர்.
மேலும், வைகை ஆற்றில் சிசிடிவி கேமாரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து, வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க, மதுரை மாநாகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன் மனுதாரரின் மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.