தலைவிரித்தாடும் ரூட்டு தல மோதல்... மாநில கல்வி மாணவர் உயிரிழப்பு!
ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்வி கல்லூரி மாணவர் சுந்தர் என்பவருக்கும் யார் அடுத்த ரூட்டு தல என்ற விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் சுந்தர் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சுந்தரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதால் சுந்தரை தாக்கிய மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதன் பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த சுந்தர் அருகிலிருந்த ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்து, காது, மார்பு உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
இது குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுந்தர், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) காலை 6 மணியளவில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன் ஆகியோரை பெரியமேடு போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
விசாரணைக்கு பிறகு அல்லிக்குளத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணவர்களை வருகிற 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி காவல்துறையினர் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் கடுமையான தாக்குதலால் உயிரிழந்த மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் இறப்புக்கு இன்று மாநில கல்லூரி வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
மேலும் படிக்க: ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக.... பிரதமர் மோடி பெருமிதம்!
சென்னையில் ரூட்டு தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதும் அதனால் உயிர்கள் பலியாவதும் இது ஒன்றும் புதிதல்ல. மாணவர்கள் கூட்டம் கூட்டமாக சாலைகள் நடுவே நின்று கோஷமிடுவது, அரசு பேருந்துகள் மீது ஏறி நின்று தகராறில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் பொதுமக்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சம் விளைவிப்பதாக இருந்து வருகிறது. எனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
What's Your Reaction?