Haryana Election: ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக.... பிரதமர் மோடி பெருமிதம்!
அரியானா தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இந்த வெற்றி, வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றன. அதேபோல் ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக கடந்த 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஹரியானாவில் பாஜக. 48 தொகுதிகளும், காங்கிரஸ் 37 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி ஹரியானாவில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
ஹரியானாவில் பாஜக வெற்றிப்பெற வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை வழங்கிய ஹரியானா மக்களுக்கு நன்றி. இது வளர்ச்சி, நல்லாட்சி அரசியலுக்குக் கிடைத்த வெற்றி எனவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஹரியானா தேர்தல் முடிவு எதிர்பாராதது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கூட்டணிக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. காஷ்மீர் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியக் கூட்டணி முழுமையாக உறுதி பூண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹரியானா மாநில தேர்தல் முடிவு எதிர்பாராதது என்றும், மக்கள் கருத்தை கட்சி மதிப்பீடு செய்து வருவதாகவும், அடிமட்ட உறுப்பினர்களிடம் பேசி, முழுமையான தகவல்களை சேகரித்து, உண்மைகளை சரிபார்த்த பின், கட்சியில் இருந்து விரிவான பதில் வரும் எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து, அக்கட்சியின் மாநில தலைவரான ரவீந்தர் ரெய்னா ராஜினாமா செய்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றிப் பெற்று ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கிறது. பாஜக 29 இடங்களில் வெற்றிப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்நிலையில் பாஜகவின் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் மாநில தலைவரான ரவீந்தர் ரெய்னா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இரண்டு மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில், ஹரியானாவில் பாஜகவும், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியும் ஆட்சி அமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?