Aadi Amavasai: ஆடி அமாவாசை.. தமிழகமெங்கும் புனித நீராடல்.. முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் புனித நீர்நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.

Aug 4, 2024 - 11:05
Aug 5, 2024 - 10:27
 0
Aadi Amavasai: ஆடி அமாவாசை.. தமிழகமெங்கும் புனித நீராடல்..  முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடு
Aadi Amavasai tharpanam

சென்னை: அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு நாம் படையலிட வேண்டும். நீத்தார் கடன் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் சுப காரியங்கள் தடைகளின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை எனவேதான் அமாவாசை நாட்களில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கிறோம். மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் தர இயலாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடலாம். ஆடி அமாவாசை தினமான இன்று தமிழகமெங்கும் உள்ள ஆறு, குளங்கள், அருவிக்கரைகளில் ஏராளமானோர் புனித நீராடி வழிபட்டனர். 

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஏராளமானோர் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். 22 தீர்த்தங்களில் புனித நீராடிய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து ராமநாதசுவாமியை வழிபட்டனர். 

இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் சரவணப்பொய்கையில் ஏராளமானோர் தர்ப்பணம் அளித்தனர். திருத்தணி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை, மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் மறைந்த முன்னோர்களுக்கு அதிக அளவு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம்  வைகை ஆற்றில் ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.  இதில் மதுரை சிவகங்கை விருதுநகர் தேனி திண்டுக்கல்.உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும்  ஆயிரக்கணக்கான வந்திருந்து இங்குள்ள வைகை ஆற்றில் தங்களது தாய் தந்தையருக்கு தர்ப்பணம் வழங்கினர். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும். ஏழைகளுக்கு பழங்கள் காய்கறிகள் உணவு பொட்டலங்களை வழங்கி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க அதிகாலை முதலே வைகை ஆற்றில் குவிந்தனர். போலீசார் வைகை ஆற்றிற்குள் செல்லும் பாதையில் வாகனங்களை அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர்.

திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தென் மாவட்டங்களில் ராமேஸ்வரத்திற்கு அடுத்த படியாக திருச்செந்தூர் கடற்கரையில் தான் தர்ப்பணம் செய்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் குவிவார்கள். ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காசிக்கு நிகராக மயிலாடுதுறை காவிரி புஷ்கர துலாகட்டம் திகழ்கிறது. இங்கு ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இங்கு 12 தீர்த்தக்கிணறுகள்  உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை, மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு புனித நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் செய்வது வழக்கம். இந்நிலையில் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் வெள்ள நீர் முழுவதும் காவிரி ஆற்றின் வழியே கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நீர் மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தை வந்து சேராததால் ஆடி அமாவாசை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் செயற்கை முறையில் போர்வெல் மூலம் புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பக்தர்கள் புனித நீராடும் வகையில் பிரத்யேகமாக குழாய் மூலம் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் வழக்கத்தை விட குறைந்த அளவே பக்தர்கள், பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் வீடுகளிலேயே குளித்துவிட்டு காவிரி கரைக்கு வந்த பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் பிண்டங்களை கரைத்து தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதேபோல இந்த ஆண்டு ஆடிஅமாவாசையான இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலை 2 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள். 

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள். அதன் பிறகு ஈரத் துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். 

பூஜை செய்த பச்சரிசி, எள், பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் கரைத்து விட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow