ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதம் தொடர்பாக மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Aug 4, 2024 - 16:55
Aug 5, 2024 - 15:57
 0
ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
Death Threats For Armstrong Wife And Child

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பரபரப்பான சென்னை மாநகரில் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பிரபல ரவுடி ஆற்காடு ரவுடி சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.  ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதற்கட்டமாக புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன்பிறகு அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ், மேலும் பிரபல பெண் ரவுடியும், முன்னாள் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளருமான புளியந்தோப்பு அஞ்சலை என அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்ததை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி கொலை செய்து விடுவதாகவும், குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மர்ம கடிதம் தொடர்பாக புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மர்ம கடிதம் தொடர்பாக மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை மிரட்டல் கடிதம் எதிரொலியாக, பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை இருக்கும் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் கடிதம் வந்த தகவல் அறிந்து பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வீட்டில் குவிந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow