முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகியை தட்டித் தூக்கிய போலீஸ்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த கபிலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Aug 4, 2024 - 10:45
Aug 5, 2024 - 10:27
 0
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகியை தட்டித் தூக்கிய போலீஸ்!
Bjp Executive Arrested

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தாங்கிப் பிடிப்பதால், சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர மாநிலத்துக்கும், நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்துக்கும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

அதே வேளையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களை பட்ஜெட்டில் முழுமையாக புறக்கணித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தின.

அப்போது திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் பிரதமர் மோடியை மிக கடுமையாக குற்றம்சாட்டி இருந்தனர். ''தேர்தல் வரும்போது, தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டுக்கு பலமுறை வந்த பிரதமர் மோடி, தமிழ்நாடு, தமிழ் என பெருமையாக பேசினார். திருக்குறளையும் பல இடங்களில் மேற்கோள் காட்டினார். ஆனால் தேர்தல் முடிந்தபிற்கு தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பிரதமர் மோடி மறந்து விட்டார். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு செய்தது துரோகம்'' என்று அவர்கள் விமர்சனத்தை வைத்து இருந்தனர். 

இதற்கு எதிராக தமிழ்நாடு பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த பொதுக்கூட்டங்கள் வாயிலாக, தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது குறித்து பாஜக நிர்வாகிகள் மக்களிடம் விளக்கம் அளித்து வருகின்றனர். 

இதற்கிடையே பாஜக வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. 

இந்த பொதுக் கூட்டத்துக்கு பாஜக தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா தலைமை தாங்கினார். இதில் உரையாற்றிய பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், அருவருத்தக்க வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் போலீசார் பாஜக நிர்வாகி கபிலன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டில் இருந்த கபிலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow