Weather Update: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாநிலங்களில் ரெட் அலர்ட்?.. முழு விவரம்!
கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது. வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் அதிதீவிர மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
இதேபோல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தர்மசாலா, பாலம்பூர், கோஹர், பௌண்டா சாஹிப், ஷிலாரூ ஆகிய பகுதிகளில் 'மேக வெடிப்பு' என்று அழைக்கப்படும் பேய் மழை கொட்டியது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை-வெள்ளம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்து விட்டனர். 45 பேர் மாயமாகி விட்டனர். மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களும் கனமழை கொட்டுகிறது. குறிப்பாக மும்பை நகரம் முழுவதுமாக வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு ரயில், பேருந்து போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இது தவிர அசாம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் கனமழை வெளுத்து கட்டுகிறது. உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகி விட்டனர்.
இப்படியாக பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து கட்டும் நிலையில், கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு மத்தியப் பிரதேசம், கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா, கொங்கன் பகுதிகள் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கும் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 10ம் தேதி வரையும், பஞ்சாப், ஹரியானா மாநிலம் சண்டிகர் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 4ம் தேதி (இன்று) முதல் 7ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவின் பால்கர், புனே மற்றும் சதாரா ஆகிய இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, நாசிக் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அசாம், மேகலாயா, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் ஒரு சில இடங்களில் 6ம் தேதியும், கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரையும் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
What's Your Reaction?