உருக்குலைந்து போன வயநாடு.. 350ஐ கடந்த உயிரிழப்பு.. இறுதி கட்டத்தை எட்டிய மீட்பு பணி!
''இதுவரை 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 67 உடல்களை அடையாளம் காண முடியவில்லை'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து படுபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கட்டடங்கள், அங்கு இருந்த பள்ளிகள், வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன.
வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதையுண்டு தூக்கத்திலேயே உயிரை பறிகொடுத்தனர்.
மேலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 24 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், 25 தமிழர்கள் மாயமாகி விட்டதாவும் தகவல் வெளியாகிஉள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்து தோண்டத் தோண்ட சடலங்கள் மீட்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் இன்று தொடர்ந்து 6வது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், விடாமுயற்சியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது.
நிலச்சரிவு காரணமாக முண்டகை-சூரல்மலை இடையேயான பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதால் ராணுவ வீரர்கள் 90 அடி நீளமுள்ள, 26 டன் எடையுள்ள 'பெய்லி' இரும்பு பாலத்தை அமைத்து மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நாடு முழுவதும் இருந்து சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் நிதி உதவி செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு முதல் ஆளாக கேரள முதல்-அமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியது. மேலும் தமிழ்நாட்டில் இருந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுபொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கர்நாடக அரசு நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவு மீட்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பணம் முழுவதுமாக மீட்பு பணிக்கு மட்டுமே செலவிடப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், ''இதுவரை 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 67 உடல்களை அடையாளம் காண முடியவில்லை. மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம், தன்னாவர்லர்கள் என 1,400க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் மறுகுடியேற்றம் செய்யப்படுவார்கள். நிலச்சரிவால் குடும்பங்களை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவு முழுவதையும் அரசு ஏற்கும். மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாய இடங்களை கண்டறிந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






