வயநாடு இடைத்தேர்தல், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்.. வாக்குப்பதிவு விறுவிறுப்பு
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் உள்ளிட்டவற்றில் மக்கள் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 81 இடங்களை கொண்ட சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் வரும் 20ஆம் தேதி என 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய இரண்டும் போட்டியிட்டு வருகின்றன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ.க, ஜார்கண்ட் அனைத்து மாணவர் கூட்டமைப்பு, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
காலை 9 மணி நிலவரப்படி 43 சட்டமன்ற தொகுதிகளில் 13.04 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக சிம்டேகா மாவட்டத்தில் 15.09 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அதேபோல், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில், காலை 10.30 மணி வரை 20.54 சதவீத வாக்குகள் பதிவாகின. வயநாடு தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
What's Your Reaction?