இந்தியா

வீட்டு லோன், கார் லோன் வாங்கியவர்கள் நிம்மதி.. ஆர்பிஐ கவர்னர் சொன்ன குட் நியூஸ்!

ரெப்போ வட்டி விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த வட்டி விகிதம் தொடர்ந்து 9வது முறையாக மாற்றமின்றி தொடர்வதாக தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வீட்டு லோன், கார் லோன் வாங்கியவர்கள் நிம்மதி.. ஆர்பிஐ கவர்னர் சொன்ன குட் நியூஸ்!
RBI Governor Shaktikanta Das

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டம் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி (இன்று) வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், ''ரெப்போ வட்டி விகிதம் 9வது முறையாக மாற்றமின்றி 6.5% ஆக தொடருகிறது. நிலையான டெபாசிட் வசதி (SDF) 6.25% ஆக மாற்றமின்றி தொடருகிறது. இதேபோல் மார்ஜினல் ஸ்டேன்டிங் பெசிலிட்டி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆக உள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதம் 4.8% ஆக இருந்த மொத்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.1% ஆக உள்ளது. இந்த நிதியாண்டின் பணவீக்கம் 4.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

உணவு பணவீக்கம் மே மாதம் 8.69% ஆக இருந்தது. இது ஜூன் மாதம் 9.55% ஆக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலை 27.33% அதிகரித்துள்ளது. 2024-25ம் நிதியாண்டில் ஜிடிபி (GDP) வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் ஜிடிபி (GDP) வளர்ச்சி 7.1% ஆகவும், 2ம் காலாண்டில் ஜிடிபி 7.2% ஆகவும், 3ம் காலாண்டில் ஜிடிபி 7.3% ஆகவும், 4ம் காலாண்டில் ஜிடிபி 7.2% ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரம் தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளது. அமெரிக்க பொருளாதார தடுமாற்றம், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்  கூறியுள்ளார்.

ரெப்போ வட்டி விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த வட்டி விகிதம் தொடர்ந்து 9வது முறையாக மாற்றமின்றி தொடர்வதாக தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்வதால் வீட்டு லோன், கார் லோன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் உயராது. இதனால் இந்த லோன்களை வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததற்கு நாட்டின் உணவுப் பணவீக்கமும், ஒட்டுமொத்த பணவீக்கமும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்புக்குள் வராததே காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.