'தாமரை மலர்ந்தே தீரும்'.. மீண்டும் பழைய பாணியை கையிலெடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

''திமுகதான் சமூகநீதியை பாதுகாத்து வருகிறது என்று தொடர்ந்து கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை-முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க முடியுமா?'' என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Aug 4, 2024 - 07:46
Aug 5, 2024 - 10:27
 0
'தாமரை மலர்ந்தே தீரும்'.. மீண்டும் பழைய பாணியை கையிலெடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!
Tamilisai Soundararajan

சென்னை: சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையாரில் தமிழ்நாடு பாஜக சார்பில்  பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ஏழைகள், விவாயிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவருக்குமான திட்டங்கள் உள்ளன.

மத்திய அரசு ஒருசில மாநிலங்களுக்கு சாதகமாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டின் பெயர் பட்ஜெட்டில் இல்லை என கூறுகின்றனர். தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது என்பது குறித்து தனித்தனியாக கூற முடியுமா? 

பிரதமர் மோடி தமிழ்நாட்டை மறந்து விட்டார் என குற்றம்சாட்டுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்சரித்ததை விட பிரதமர் மோடி அதிகமான முறை திருக்குறை உச்சரித்துள்ளார். திமுக பல ஆண்டுகளாக தஸ்மைல் மொழியை வளர்க்க பாடுபட்டதாக கூறுகின்றனர். ஆனால் தமிழ்மொழியை வளர்ப்பதைவிட கனிமொழியை வளர்க்கதான் திமுக பாடுபட்டுள்ளது.

திமுகதான் சமூகநீதியை பாதுகாத்து வருகிறது என்று தொடர்ந்து கூறி வரும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை-முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க முடியுமா? வேங்கை வயலில் குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் திமுக சமுகநீதி குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்படும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. வடசென்னையில் கடைகளில் வெற்றிலைப்பாக்கு இருக்கிறதோ இல்லையோ, கஞ்சா உள்ளது. 
போதைப்பொருள் வைத்திருப்பவர்களை கட்சியில் இருந்து நீக்கினால் திமுகவே காலியாகிவிடும். 

சாதி குறித்து கேள்வி கேட்பதுதான் மத்திய அமைச்சர் அனுராக் சிங்தாக்குரின் வேலையா? என கனிமொழி கேள்வி எழுப்புகிறார்?  அவர் தூத்துக்குடிக்கு சென்று போட்டியிடுவது எதற்காக? பாஜகவை பொறுத்தவரை வாக்குகளை நினைத்து ராமரை வணங்குவதில்லை. தேசத்தையும், நாட்டையும் பாதுகாப்பதால் ராமரை வணங்குகிறோம். முதலமைச்சர் ஸ்டாலின் வேற்றுமையை பார்க்காதவராக இருந்தால் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூற வேண்டும்'' என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

முன்னதாக, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்ட மேடையில், 'தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்..',  'தாமரை மலர்ந்தே தீரும்..' என்ற கோஷங்களை தமிழிசை சௌந்தரராஜன் முழங்கினார். தமிழிசையையும், தாமரை மலர்ந்தே தீரும் என்ற வார்த்தையையும் எப்போதும் பிரிக்க முடியாது. தமிழிசை, தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோது, அனைத்து இடங்களிலும் 'தாமரை மலர்ந்தே தீரும்..' என்ற வாசகத்தை உச்சரிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். தற்போது மீண்டும் பழைய பாணியை தமிழிசை சௌந்தர்ராஜன் கையிலெடுத்து இருப்பது பாஜக தொண்டர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow