இன்று 2வது ஒருநாள் போட்டி.. இந்திய பேட்ஸ்மேன்கள் vs இலங்கை ஸ்பின்னர்கள்.. வெற்றி பெறப்போவது யார்?
இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளார். ஆனால் சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி விளையாடவில்லை. இதேபோல் ஷிவம் துபேவும் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரு 50 ஓவர் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இதில் மூன்று டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை வொயிட்வாஷ் செய்தது. கொழும்புவில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டி யாருக்கும் வெற்றி, தோல்வி இன்றி சமனில் முடிந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 230 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 142/6 என பரிதவித்த இலங்கை அணியை, துனித் வெல்லலகே சூப்பர் அரைசதம் (65 பந்தில் 67 ரன்கள்) அடித்து மீட்டார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பின்பு ஆடிய இந்திய அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 74 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 47 பந்தில் 58 ரன்கள் அடித்தார். ஆனால் ரோகித் சர்மா அவுட் ஆனதும் ஆட்டம் தலைகீழாக மாறியது. முன்னணி வீரர்கள் விராட் கோலி (24 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (23 ரன்), கே.எல்.ராகுல் (31 ரன்) என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். முடிவில் இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்கள் எடுக்க ஆட்டம் சமனில் முடிந்தது.
கடைசியில் ஷிவம் துபே (25 ரன்), பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததும், வெற்றிக்கு 1 ரன் தேவை இருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் (0 ரன்) தேவையில்லாமல் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனதும் இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளார். ஆனால் சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி விளையாடவில்லை. இதேபோல் ஷிவம் துபேவும் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். பெளலிங்கை பொறுத்தவரை முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இலங்கை அணியை பார்த்தால், கேப்டன் சரித் அசலங்கா, அகில தனஞ்செயா, நிஷான் மதுஷா என முன்னணி வீரர்கள் ஒருசேர சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த தவறி விட்டனர். கடந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வென்ற துனித் வெல்லலகே பெளலிங், பேட்டிங் என இரண்டிலும் அசத்தி வருகின்றனர். வனிந்து ஹசரங்கா, சரித் அசலங்கா என ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.
ஆகவே இன்றைய போட்டி இலங்கை அணியின் ஸ்பின்னர்கள் vs இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இடையிலான மோதலாக இருக்கும். இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. சோனி 10, சோனி 4 உள்ளிட்ட சோனி ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் இந்த போட்டியை நேரலையாக காணலாம். மேலும் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் போட்டியை கண்டுகளிக்கலாம்.
What's Your Reaction?






