Womens Asia Cup 2024 Final Match : இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன. அதன்படி இந்திய நேரப்படி நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் ஃபைனலில், இந்தியா – இலங்கை அணிகள்(IND W vs SL W) மோதுகின்றன. ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என மூன்று அணிகளையும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
அதேபோல், பி பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணி, வங்கதேசம், மலேஷியா, தாய்லாந்து அணிகளை வென்று 6 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது. இதனையடுத்து நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. தம்புலா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஃபைனலுக்கு தகுதிப் பெற்றது இந்திய அணி. அதேபோல் நேற்று மாலை நடைபெற்ற இன்னொரு அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை த்ரில் வெற்றிப் பெற்றது இலங்கை.
அதன்படி இப்போட்டியில் டாஸில் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் ஓபனர் முபினா அலி அதிகப்பட்சமாக 37 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் உதேசிகா பிரபோதனி, கவிஷா தில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின்னர் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கை தொடங்கியது இலங்கை அணி.
மேலும் படிக்க - பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்
பாகிஸ்தான் அணியின் சாதியா இக்பால் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், இலங்கை அணியின் கேப்டன் சாமரி அதபத்து பொறுப்பாக விளையாடி 48 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல், மிடில் ஆர்டரில் களமிறங்கிய அனுஷ்கா சஞ்சீவனி பாகிஸ்தான் பந்துவீச்சை சாமர்த்தியமாக சமாளித்து ஆடினார். பாகிஸ்தான் எளிதாக வெற்றிப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனுஷ்காவின் ஆட்டம் இலங்கைக்கு வெற்றியைத் தேடித் தந்தது. அதன்படி இலங்கை அணி 19.5 ரன்களில் 141 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
இதனையடுத்து நாளை மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுகின்றன. இதில் இந்திய அணியே வெற்றிப் பெறும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் வலிமையாக உள்ள இந்திய அணிக்கு, இலங்கை சவாலாக இருக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.