IND vs SL 2024 First ODI Match Highlights : இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் நடைபெற்ற மூன்று டி 20 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி வீரர்கள் பதும் நிஷாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ இருவரும் ஓபனர்களாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கி இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது இலங்கை. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ் பந்தில், அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் நடையை கட்டினார் அவிஷ்கா பெர்னாண்டோ.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை வீரர்களும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை என்றாலும், ஓபனரான நிஷாங்கா மட்டும் நிலைத்து நின்று ஆடி 54 ரன்கள் எடுத்தார். அதேபோல், பின்வரிசை வீரராக களமிறங்கிய டுனித் வெல்லாலகே அபாரமாக ஆடி, 65 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இதனால் தடுமாறிக் கொண்டிருந்த இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒரேயொரு ஓவர் மட்டும் வீசிய சுப்மான் கில், 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதுதான் பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருந்த இலங்கை அணிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தது.
இதனையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோஹித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர் 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினாலும், இன்னொரு ஓபனரான சுப்மான் கில் 16 ரன்களிலும், விராட் கோலி 24 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஸ்ரேயாஷ் ஐய்யர் 23, கேஎல் ராகுல் 31, அக்ஷர் பட்டேல் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். ஆனால் இந்திய அணி எளிதாக வெற்றிப் பெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க - ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி அபாரம்
கடைசிக் கட்டத்தில் இந்திய அதிரடி வீரர் ஷிவம் துபே 24 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றியை உறுதி செய்துவிடும் நிலைக்கு கொண்டு சென்றார். ஆனால், அப்போது தான் இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த கனவும் சுக்குநூறாக சிதைந்து போனது. ஆம்! ஹசரங்கா வீசிய 47வது ஓவரில் இந்திய அணி 10 ரன்களை எடுத்தது. இதனால் மூன்று ஓவர்கள், அதாவது 18 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் போதும் வெற்றி என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. அப்போது அசலங்கா வீசிய 48வது ஓவரில் பவுண்டரி அடித்த சிவம் துபே, ஸ்கோரை சமன் செய்தார். இதற்கு மேல் ஆட்டத்தில் என்ன இருக்கிறது என வெற்றியை கொண்டாட தயாராகினர் இந்திய அணி வீரர்கள்.
ஆனால், அடுத்த பந்திலேயே சிவம் துபே 25 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாபநிலைக்குச் சென்றது. இருப்பினும் ஒரு ரன் எடுத்துவிட்டால் வெற்றிப் பெற்றுவிடலாம் என ரசிகர்கள் காத்திருக்க ஆட்டம் பரபரப்பானது. கடைசி விக்கெட்டாக களாமிறங்கிய அர்ஷ்தீப் சிங்கும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. 47.5 ஓவர்களில் 230 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் அசலங்கா, ஹசரங்கா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை துவம்சம் செய்தனர். கேப்டன் ரோஹித் சர்மா, கோச் கவுதம் கம்பீரின் சில தவறான முடிவுகள் தான் இந்திய அணியின் டிராவுக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.