Paris Olympics 2024 : ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி அபாரம்... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை!
India Mens Hockey Team in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், 52 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
India Mens Hockey Team in Paris Olympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகின்றன. ஜூலை 26ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகின்றன. 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது நடைபெற்ற ஆடவர் ஹாக்கிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் 52 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 1972ம் ஆண்டு நடைபெற்ற மூனிச் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றிருந்தது. அதன்பின்னர் நடைபெற்ற அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தான் காணப்பட்டது. இந்த துயரத்துக்கு 52 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவு கிடைத்துள்ளது. ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. லீக் சுற்றில் இந்திய அணி விளையாடும் கடைசிப் போட்டி இது என்பதால், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர்.
பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால், ஆஸ்திரேலியாவை வெற்றிப் பெறுவது கடினம் என்றே சொல்லப்பட்டது. ஆனால், ஆட்டம் தொடங்கி 12வது நிமிடத்திலேயே இந்திய அணி வீரர் அபிஷேக் முதல் கோல் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்தார். இதிலிருந்து மீள்வதற்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த ஷாக்கிங் கொடுத்தது இந்திய அணி. ஆம்! 13வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங். இதனால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்திய ஹாக்கி அணி வரலாற்று சாதனை #Kumudamnews24x7 | #Kumudamnews | #Kumudam | #ParisOlympics2024 | #Paris2024 | #OlympicGames | #OlympicGamesParis2024 | #OlympicGames | #India | #INDvsAUS | #Hockey | #TeamIndia pic.twitter.com/2qDWIsAygf — KumudamNews (@kumudamNews24x7) August 2, 2024
அதேநேரம் இதற்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முறியடித்தார். ஆனாலும் ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் தாமஸ் க்ரைக் அந்த அணிக்கு முதல் கோல் அடித்து கம்பேக் கொடுத்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் இன்னொரு கோல் அடிக்க, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னணி வகித்தது. இறுதியாக ஆஸ்திரேலியா அணியின் பிளேக் கோவர்ஸ் ஒரு அடிக்க, ஆட்டம் 3-2 என்ற கணக்கில் முடிவை எட்டியது. இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் 52 ஆண்டுகள் வெற்றி தாகத்தை தீர்த்துக்கொண்ட மகிழ்ச்சியை ஆடிப்பாடி கொண்டாடினர்.
மேலும் படிக்க - குத்துச்சண்டையில் பெண் வீராங்கனையுடன் மோதியது ஆணா..?
இந்த வெற்றியின் மூலம் பி குரூப்பில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. ஒட்டுமொத்தமாக 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல், மனு பாக்கர் 25 மீ ஏர் பிஸ்டலில் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். இன்னொருபக்கம், வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் அங்கிதா பகத் – தீரஜ் பொம்மதேவரா இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் இன்றைய தினம் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக்கவில்லை என்றாலும், முக்கியமான வெற்றிகளை வசமாக்கியுள்ளது.
What's Your Reaction?