இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது!

தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Aug 4, 2024 - 01:52
 0
இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது!
Pudukkottai Fishermen Arrested

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து இன்று காலை 42 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இதில் ஒரு விசைப்படகில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த சரண் (24), பாலா (29), கணேசன் (32), பரமசிவம் (51) ஆகிய 4 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இன்று மாலை 4.30 மணி அளவில் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் காங்கேசன்துறை  கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர்  அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. அதுவும் கடந்த சில மாதங்களாக நமது மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, படகுளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் ஒரு படகை ரோந்து கப்பல் மூலம் மோதச் செய்து மூழ்கடித்துள்ளனர். இதில் படகில் இருந்த 3 மீனவர்கள் கடலில் மூழ்கினார்கள். ஒரு மீனவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

கடந்த மாத தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை கைது செய்தனர்.மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். 

இதற்கு முன்பாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ராமேஸ்வரத்தின் பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் கைது செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் நான்கு நாட்டுப்படகுகளையும் சிறைபிடித்தனர். 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினார்கள். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow