'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்

நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nov 21, 2024 - 19:49
Nov 21, 2024 - 20:57
 0
'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்
நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி கடந்த நவம்பர் 3ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை கிளம்பியது. தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. 

இதனால் அவருக்கு எதிராக ஏராளமான புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டன. எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கஸ்தூரி ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சம்மன் கொடுக்க சென்றபோது வீடு பூட்டியிருந்ததாகவும், அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, நடிகை கஸ்தூரியின் வீட்டு பணியாளர்களிடம் தனித்தனியாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஹைதராபாத்திற்கு அருகே இருப்பது தெரியவந்தது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் என்பவர் வீட்டில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி நேற்று முன்தினம் அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கஸ்தூரியின் குழந்தையின் நிலைமையை கருத்தில் கொண்டு சென்னை மாநகர காவல்துறை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படாது எனவும் தகவல் வெளியானது.

இந்த மனு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், கஸ்தூரிக்கு எழும்பூர் 14 ஆவது நீதிமன்ற நீதிபதி தயாளன் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் 10 மணியளவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது மேலும் இரு நபர் உத்தரவாதமும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடிகை கஸ்தூரியின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் செய்தியாளர்களை எழும்பூர் நீதிமன்ற வாயிலில் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று [20-11-2024] வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இன்று மாலைக்குள் புழல் சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி வெளியே வருவார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள ஜாமீன், நிபந்தனை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தினமும் காலை 10:30 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஸ்தூரி ஒரு பெண் என்றும், அவருக்கு ஸ்பெஷல் சைல்ட் இருப்பதாகவும் எங்களது தரப்பு வாதத்தை முன் வைத்தோம். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைத்தோம்.

இதையடுத்து காவல்துறை தரப்பில் கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று வாதத்தை முன் வைத்தனர். மேலும் மனிதாபிமான அடிப்படையில் கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவில் நடிகை கஸ்தூரி இரண்டு உத்தரவாதங்கள் நீதிமன்றத்தில் வழங்க வேண்டும் என்ற உத்தரவும், நானும் மற்றொரு வழக்கறிஞர் கார்த்திக் என்பவரும் கஸ்தூரிக்காக ஜாமீன் கோரி தனித்தனியாக மனுதாக்கல் செய்திருந்தோம்.

அதில் ஒரு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனுவில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக எதுவும் குறிப்பிடவில்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு அவிடவிட் தாக்கல் செய்ய திட்டம் இல்லை. சிறைக்குள் நடிகை கஸ்தூரி உடல்நலத்தோடு நன்றாக உள்ளார்" என்று வழக்கறிஞர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow