எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து- ஆன்லைன் சேவைகள் பாதிப்பு
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் சி.சி.டி.வி கண்ட்ரோல் அறை கீழ் தளத்தில் செயல்படுகிறது. அதன் முதல் மாடியில் ரயில்வே டெலி கம்யூனிகேசன் மையம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று பிற்பகலில் 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கரும்புகை வந்தது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து
அடுத்த சில நிமிடங்களில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதைப்பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அந்த அலுவலகத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எழும்பூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து விரைந்து வந்த வீரர்கள் சில நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கம்யூனிகேசன் மையத்திலிருந்து கம்ப்யூட்டர் மானிட்டர்கள் உள்பட எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
டிக்கெட் விநியோகத்தில் இடையூறு
இந்தச் சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தீ விபத்து நடந்த இடத்தை ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. விபத்து ஏற்பட்ட கம்யூனிகேசன் சென்டரில் ரயில்வே தொடர்பான தகவல்கள் பகிரப்படும். குறிப்பாக இணைய சேவைகளும் இந்த மையத்தின் சர்வர் மூலம் வழங்கப்படும். தற்போது தீ விபத்து ஏற்பட்டதால் இந்த சேவை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Read more: வெறுப்பரசியலின் ஆணிவேரே அறிவாலயம் தானே…முதலமைச்சருக்கு வானதி சீனவாசன் கேள்வி
இருப்பினும் ரயில்வே சேவையிலும், சிக்னலிலும் எந்த பாதிப்பும் இல்லை. அதே நேரத்தில் ரயில்வே சர்வரில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் டிக்கெட் விநியோகத்திலும் சில இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதை உடனடியாக சரிசெய்து விட்டதாக தெரிகிறது. துரிதமாக செயல்பட்டதால் அந்த அறையிலிருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை காப்பாற்றியிருப்பதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






