கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர், விஜயராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த 2020 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழ்நாட்டில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது வருந்தத்தக்கது என தெரிவித்து, தமிழில் குடமுழுக்கு நடத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தும்படி அனைத்து செயல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அளித்த மனு மீது இதுவரை எந்த பதிலும் இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை எடுத்து மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஏற்கனவே மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரிய வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் நாளை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.