ஈழத்தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதா?.. பொங்கிய சீமான்.. அடுக்கடுக்கான கேள்வி!

''உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தங்களை நாடி வந்த மக்களை, தங்கள் நாட்டுக் குடிகள் போலப் பாவித்துக் குடியுரிமை வழங்கிப் பாதுகாக்கும் சூழலில், ஒரு தலைமுறை கடந்து இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்தும் எம்மக்களுக்குக் குடியுரிமையை மறுத்துப் புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Aug 3, 2024 - 19:39
 0
ஈழத்தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதா?.. பொங்கிய சீமான்.. அடுக்கடுக்கான கேள்வி!
Seeman Speech About Eela Tamilargal

சென்னை: ஈழத்தமிழர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பவதை திமுக அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், '' இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய் நிர்கதியற்ற நிலையில் இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களை, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் மனிதநேயம் சிறிதுமின்றி வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அடிப்படை உரிமைகள், வாழ்விட வசதிகள் என ஏதும் வழங்காமல் அடிமைகள் போலத் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்துவைத்த போதிலும் உயிர்ப்பாதுகாப்பு என்ற ஒன்றாவது இருந்தது. தற்போது அதனையும் பறிக்கும் விதமாக ஈவு இரக்கமற்று இனவாத நாடான இலங்கைக்கு அனுப்புவது கொலைக்களத்திற்கு அனுப்புதற்கு ஒப்பாகும்.

தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ்மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதிசெய்து வாழ்வளிக்கின்றன. ஆனால், தனித்த பெரும் தேசிய இனமாகப் பத்துகோடி தமிழர்கள் பரந்து விரிந்து, நிலைத்து நீடித்து வாழும் இந்தியப்பெருநாட்டில், தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என விரட்டுவது தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிப்பதாகும்.

இலங்கையிலிருந்து வந்த ஈழச்சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறிவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கலாமே! 

அதனைவிடுத்து, எவ்வித அடிப்படை வசதியுமின்றித் திறந்தவெளி சிறைக்கூடத்தில் கைதிகளைப் போல அவர்களை அடைத்துவைத்து, வந்தநாள் முதல் கண்காணித்துக் கடும் அடக்குமுறைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளாக்கி தற்போது சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி திருப்பி அனுப்புவது தமிழினத்தின் தன்மான, இனமான உணர்வுகளைச் சீண்டிப்பார்ப்பதாகும்.

இந்தியாவைத் தந்தையர் நாடெனக் கருதி நேசித்து நின்ற எமது தொப்புள்கொடி உறவுகள் எப்படிச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆனார்கள்? அவர்களைக் குடியமர்த்தும்போது அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று தெரியாதா? சட்டவிரோதமாக வந்தவர்கள் என்றால் எந்த அடிப்படையில் இந்நாடு குடியமர்த்தியது? 

அதிகாரிகள் முன்னிலையில் பதிவு செய்து, முகாம்களில் தங்கவைத்து, அவர்களின் எண்ணிக்கை, அவர்கள் வெளியே செல்லும் நேரம், உள்ளே வரும் நேரம் என அனைத்தையும் ஒவ்வொரு நாளும் கணக்கெடுத்து அவற்றைச் சட்டப்பூர்வமாக ஆவணப்படுத்திவிட்டு, தற்போது அவர்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று வெளியேற்றுவது கொடுங்கோன்மையாகும்.

உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தங்களை நாடி வந்த மக்களை, தங்கள் நாட்டுக் குடிகள் போலப் பாவித்துக் குடியுரிமை வழங்கிப் பாதுகாக்கும் சூழலில், ஒரு தலைமுறை கடந்து இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்தும் எம்மக்களுக்குக் குடியுரிமையை மறுத்துப் புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்? ஈழத்தாயகத்தை முற்றாகச் சிதைத்தழித்து, அங்கு வாழ்ந்த தமிழின மக்களை நாடற்றவர்களாக்கி, ஏதிலி‌யெனும் இழிநிலைக்குத் தள்ளி, நாடு நாடாக ஓடவைத்துவிட்டு இன்றைக்கு அவர்கள் தஞ்சம்கேட்டு நிற்கையில், அவர்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி துரத்துவது எவ்வகையில் நியாயமாகும்?

இந்நாட்டின் விடுதலைக்காக அளப்பெரும் பங்களிப்பைச்செய்த இந்நிலத்தின் பூர்வக்குடி மக்களான தமிழர்களை மட்டும் மாற்றாந்தாய் மனப்போக்கோடு வெளியேற்றுவது பெரும்கோபத்தைத் தருகிறது.
இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் இக்கொடுஞ்செயல் நாட்டின் முன்னேற்றத்திற்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிப்புச் செய்து வரும் தமிழர்களின் உணர்வுகளை உரசிப்பார்ப்பதோடு, வருங்காலத் தலைமுறை பிள்ளைகளிடத்தில் இந்திய உணர்வே முழுமையாகப் பட்டுப்போகுமளவுக்கு ஆறாத ரணத்தை உருவாக்குமென எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி வெளியேற்றும் நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சட்டப்போராட்டமும், அரசியல் நெருக்கடியும் கொடுக்க வேண்டும்'' என்று சீமான் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow