உலகம்

கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்.. செப்டம்பர் 4ல் முதல் நேரடி விவாதம்.. வெற்றி பெறப் போவது யார்?

செப்டம்பர் 4ம் தேதி பென்சில்வேனியாவில் மக்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸும்-டிரம்பும் நேரடி விவாதத்தில் ஈடுபட உள்ளனர். டொனால்ட் டிரம்ப் முதல் விவாதத்தில் பைடனை திணறடித்ததுபோல் கமலா ஹாரிஸை திணறடிப்பாரா? டிரம்ப்புக்கு கமலா ஹாரிஸ் எந்த மாதிரியான பதிலடி கொடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்.. செப்டம்பர் 4ல் முதல் நேரடி விவாதம்.. வெற்றி பெறப் போவது யார்?
Kamala Harris And Donald Trump First Debate

வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு அவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். 

அத்துடன் அவர் புதிய அதிபர் வேட்பாளராக தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். ஜனநாயக கட்சி நிர்வாகிகள் விருப்பப்படி 59 வயதான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கமலா ஹாரிஸுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை விட அதிக ஆதரவு கிடைத்துள்ளது. 

மேலும் அமெரிக்க தொழில் அதிபர்கள் கமலா ஹாரிஸுக்கு தேர்தல் நிதியை அள்ளிக்குவித்து வருகின்றனர். ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. இதில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவர் தனது பிரசாரத்தை விஸ்கான்சின் மாகாணத்தில் இருந்து தொடங்கியுள்ளார். 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடும் கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் செப்டம்பர் 4ம் தேதி முதல் நேரடி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர். பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் இந்த நேரடி விவாதத்தை நடந்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வழக்கப்படி போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் தாங்கள் செய்த திட்டங்கள், செய்யப்போகும் திட்டங்கள் குறித்து ஓரிடத்தில் பொதுமக்கள் முன்பு நேரடி விவாதத்தில் ஈடுபடுவார்கள். 

இதே வழக்கப்படி ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் மக்கள் முன்னிலையில் கடந்த மே மாதம் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 90 நிமிடங்கள் நடந்த விவாதத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, பணவீக்கம் மற்றும் நிதி விவகாரம், கருக்கலைப்பு சட்டம், புலம்பெயர்ந்தவர்கள் விவகாரம் ஆகியவை குறித்து இருவரும் பேசினார்கள்.

இந்த விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் குரலை உயர்த்தி பேச, பைடன் மிகவும் தயங்கியபடி பேசினார். பல்வேறு விஷயங்களில் முன்னாள் அதிபர் டிரம்ப் தடலாடியாக பேசியபோது, பைடன் அவருக்கு உரிய பதிலடி கொடுக்கவில்லை. இது ஜனநாயக கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன் வயது முதிர்வு காரணமாக ஜோ பைடன் மறதி பிரச்சினையிலும் சிக்கியுள்ளார். இந்த விவாதத்தில் தடுமாறிய ஜோ பைடன் கடைசியில் போட்டியில் இருந்தே பின்வாங்கி விட்டார்.

தற்போது ஜோ பைடன் இடத்தில் கமலா ஹாரிஸ் உள்ளார். செப்டம்பர் 4ம் தேதி பென்சில்வேனியாவில் மக்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸும்-டிரம்பும் விவாதத்தில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப்பை கொள்கைரீதியாக எதிர்க்கும் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சி காலத்தில் செய்த தவறுகளை பட்டியலிட்டு பேசி வருகிறார். மறுபக்கம் டொனால்ட் டிரம்ப், ''கமலா ஹாரிஸ் எனக்கு ஒரு ஆளே இல்லை. அவரை எளிதாக தோற்கடித்து விடுவேன். இதற்கு முன்பு இந்தியர் என கூறிய கமலா ஹாரிஸ், இப்போது தான் ஒரு கறுப்பர் என கூறி அனுதாபம் தேடுகிறார்'' என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இதனால் இருவரும் பங்கேற்க உள்ள முதல் விவாதம் அமெரிக்க மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டொனால்ட் டிரம்ப் முதல் விவாதத்தில் பைடனை திணறடித்ததுபோல் கமலா ஹாரிஸை திணறடிப்பாரா? டிரம்ப்புக்கு கமலா ஹாரிஸ் எந்த மாதிரியான பதிலடி கொடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.