அம்மாவின் தற்கொலைக்கு காரணம்.. பழிக்குப்பழியாக எரித்துக்கொன்றேன்.. கடலூர் இளைஞர் பகீர்

Cuddalore Murder Case : கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்துள்ளது.

Jul 19, 2024 - 12:08
Jul 20, 2024 - 10:20
 0
அம்மாவின் தற்கொலைக்கு காரணம்.. பழிக்குப்பழியாக எரித்துக்கொன்றேன்.. கடலூர் இளைஞர் பகீர்
Cuddalore Murder Case

Cuddalore Murder Case: கொலை செய்வது எல்லாம் இப்போது பிரியாணி சாப்பிடுவது போல ஜஸ்ட் லைக் தட் என்றாகி விட்டது. கடலூர்  நெல்லிக்குப்பம் அடுத்த காராமணி குப்பம் பகுதியில் தாய் மகன் பேரன் மூன்று பேர்  கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மாவின் தற்கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் மூவரையும் கொன்று எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கடந்த 15ஆம் தேதியன்று கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிகுப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் பேரன் ஆகிய 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீஸ் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கமலேஸ்வரி (65) - சுரேஷ்குமார்(70) தம்பதி. இந்த தம்பதி பல ஆண்டுகளாக நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்தனர்.
சுரேஷ் குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சுரேஷ்குமார் மறைவுக்குப் பிறகு கமலேஸ்வரி அவரது மகன் சுதன் குமார் (40) மற்றும் பேரன் (சுதன் குமாரின் மகன்) நிஷாந்த் (10) ஆகியோர் வசித்து வந்தனர். 

சுதன் குமார் திருமணம் ஆகி சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றுள்ளார்.ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி செய்து வந்த சுதன் குமார் 15 நாட்கள் அலுவலகத்திலும், 15 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் 15ஆம் தேதியன்று நெல்லிக்குப்பதில் உள்ள வீட்டில் சுதன் குமார், தாய் கமலேஸ்வரி மற்றும் மகன் நிஷாந்த் மூவரும் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், இது கொலையாக இருக்கலாம் என்று கருதினர்.

இந்த நிலையில், சுதன் குமார் விவாகரத்துக்குப் பிறகு அஞ்சுதம் சுல்தானா என்பவருடன் 'லிவிங் டு கெதர்' உறவு முறையில் இருந்து வந்தது தெரிய வந்தது. அஞ்சுதம் சுல்தானா வெளிநாடு சென்றிருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்புதான் பெங்களூரு வந்துள்ளார். பெங்களூரில் இருந்து அஞ்சுதம் சுல்தானாவை நேரில் விசாரணைக்கு அழைத்த நிலையில், இன்று டிஎஸ்பி பழனி தலைமையில் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது.மேலும், கொலை செய்யப்பட்ட சிறுவன் நிஷாந்த் சுதன் குமாருக்கும், அஞ்சுதம் சுல்தானாக்கும் பிறந்த குழந்தை என்பதும் தெரிய வந்துள்ளது. 

இந்த கொலை சம்பந்தமாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. திடீர் திருப்பமாக காராமணி குப்பத்தைச் சேர்ந்த சங்கர் ஆனந்த் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவர் இந்த கொலையை செய்திருப்பதாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து கமலேஸ்வரி அணிந்திருந்த சில நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சங்கர் ஆனந்த் அளித்த வாக்குமூலத்தில், “காராமணிக்குப்பம் ரயில்வே ட்ராக்கில் விழுந்து எனது அம்மா தற்கொலை செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் சுகன்குமார்தான். அதனால் அவரை தீர்த்துக்கட்ட கடந்த ஆறு மாதமாக திட்டமிட்டு ஜூலை 13 ஆம் தேதி சுதன்குமார் வீட்டுக்குள் புகுந்து அவரை மட்டும் கொலை செய்ய முயற்சி செய்தேன். அவரது அம்மா கமலேஸ்வரி என்னை தடுக்க முயன்றதால் இருவரையும் கொலை செய்தேன்.

இதையடுத்து சிறுவனை வெளியில் விட்டால் நடந்த விஷயங்களை சொல்லிடுவான் என்பதால் அவனது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இதைத் தொடர்ந்து மறுநாள் (ஜூலை 14 ஆம் தேதி) நண்பர்களுடன் சென்று பெட்ரோல் ஆசிட் ஊற்றி மூன்று பேரையும் எரித்தோம். பின்னர் பீரோவில் இருந்த பணம் நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பித்தோம். போலீஸ் கண்டு பிடிக்காது என நினைத்தோம் என்று தெரிவித்துள்ளார்.


மூன்று பேரை துடிக்க துடிக்க கொன்றதோடு மட்டுமல்லாது உடலை வீட்டிற்குள் போட்டு எரித்து விட்டு ஜாலியாக ஊர் சுற்றி வந்தவர்களை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow