சென்னையில் F4 கார் ரேஸ் தொடங்கியது.. சீறிப்பாயும் கார்கள்.. ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள்!
சென்னையில் கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர்.
சென்னை: உலகின் பல்வேறு நாடுகளில் ஃபார்முலா கார் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. கார் பந்தயங்களுக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், முதன்முறையாக சென்னையில் ஃபர்முலா 4 கார் ரேஸ் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெற உளளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டி கார் பந்தய ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தப் போட்டி தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதில் JK FLGB F4, F4 Indian Championship, Indian Racing League ஆகிய பந்தயங்களுக்கான பயிற்சி சுற்றும், அதன்பிறகு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அதே வேளையில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. 'தமிழ்நாட்டில் சில இடங்களில் தரமான சாலைகள் அமைக்கப்படவில்லை; பள்ளிகள் சீரமைக்கப்படவில்லை. இந்த நேரத்தில் கார் பந்தயம் அவசியமா?'' என்று அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
மேலும் ஃபார்முலா கார் பந்தயத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கார் பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ''எஃப்.ஐ.ஏ சான்றிதழ் இல்லாமல் கார் பந்தயம் நடத்தக்கூடாது; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கார் பந்தயம் நடத்த வேண்டும்'' என்று உத்தரவிட்டது.
இன்று மதியம் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நீண்ட நேர தாமத்திற்கு பிறகு சென்னையில் கார் பந்தயம் இன்று மாலை தொடங்கியது.
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா சாலை மன்றோ சிலை அருகே கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தற்போது கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர். இந்த போட்டி இரவு 10.45 மணி வரை நடைபெறும் எனவும் நாளை பிரதான போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?