பிரதமருக்கு எதிராக மாணவர்கள் கொதிப்பு.. பற்றி எரியும் வங்கதேசம்.. வன்முறைக்கு 32 பேர் உயிரிப்பு

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்த கலவரத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 32 ஆக உயர்ந்துள்ளது. 2,500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தில் வங்கதேசத்தில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் போராட்டத்திற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்.

Jul 19, 2024 - 11:26
Jul 20, 2024 - 10:20
 0
பிரதமருக்கு எதிராக மாணவர்கள் கொதிப்பு.. பற்றி எரியும் வங்கதேசம்.. வன்முறைக்கு 32 பேர் உயிரிப்பு
bangladesh protests

வங்கதேசத்தில் அரசு பணிகளில் முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதாவது முதலில் வங்கதேசம் பாகிஸ்தான் நாட்டுடன் இருந்தது. அதன்பிறகு 1971ம் ஆண்டில் தான் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திரம் பெற வேண்டி போராடி உயிர் துறந்தவர்களின் வாரிசுகளுக்கு தான் அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு என்பது வழங்கப்படுகிறது.
இந்த இடஒதுக்கீடு என்பது வங்கதேச நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி இறந்தவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் வரை தொடர்கிறது. இதனால் மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தான் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த 2018 ல் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு என்பது ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஜூன் 5ம் தேதி விசாரித்த அந்நாட்டின் உயர்நீதிமன்றம் மீண்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என உத்தரவிடப்பட்டது. 

இந்த உத்தரவை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தலைநகர் டாக்காவில் மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அங்குள்ள அரசு ஒளிபரப்பு நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் தீவைத்தனர். இதனால் நிலைமை மோசமானது. இந்த வேளையில் வங்கதேசத்தை ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் நிலைமை மேலும் மோசமானது. இந்த மோதலில் 32 பேர் வரை உயிரிழந்துள்ளனர் 2,500க்கும் அதிகமானவர்கள் காயடைந்துள்னர். இதனால் தற்போது வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 

இந்த போராட்டத்துக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் டாக்காவில் மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக அமைதியான முறையில் தான் போராடினார்கள்.  இதனையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அமைதியாக இருக்கும்படி கூறிய அவர், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அவர் ‛x’ என குறிப்பிட்டார். அதாவது பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிய விரும்பாத சிலர் அப்போது சில சூழ்ச்சிகளை செய்தனர். இந்த சூழ்ச்சிக்காரர்களை ‛ரசாகர்கள்’ என கூறினர். அந்த வகையில் இப்போதும் போராட்டத்தில் ஈடுபடுவோரை ‛ரசாகர்கள்’ என ஷேக் ஹசீனா கூறியது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஆக்ரோஷமான மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர்.பிரதமர் பேட்டி அளித்த அரசு தொலைக்காட்சி அலுவலகம் வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் கண்ணீர்புகைகளை பயன்படுத்தி விரட்ட முயற்சித்தனர்.கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் ரப்பர் தோட்டாக்களால் துப்பாக்கிசூடு நடத்தியத்தில் 32 பேர் உயிரிழந்தனர். 2500 பேர் படுகாயமடைந்தனர்.கட்டுக்குள் அடங்காத கலவரத்தால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது 

வன்முறையாளர்களிடம் பேச்சுவார்த்தைக்கு தயாரானபோது அவர்களின் முதல் கோரிக்கையே பிரதமர் ஷேக் ஹசீனா மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது தான். கலவரத்தில் பாதிக்கப்பட்ட 1,000திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வங்கதேச வரலாறு இப்படிப்பட்ட கலவரத்தை கண்டதில்லை. எதிர்கட்சிகளும் மாணவர்கள் அமைப்புகளும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கொடுங்கோல் ஆட்சி எனவும் விமர்சித்து வருகின்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow