'இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை.. சீனாவில் அப்படி இல்லை'.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு!

''பலர் இந்தியர்களுக்கு திறமை இல்லை என்று கூறுகின்றனர். இந்தியாவில் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் திறமைசாலிகளுக்கு இந்தியா மதிப்பு கொடுப்பதில்லை'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Sep 9, 2024 - 09:17
 0
'இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை.. சீனாவில் அப்படி இல்லை'.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு!
Rahul Gandhi In USA

வாஷிங்டன்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் சென்றடைந்த அவருக்கு இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் சார்பில் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும். நேற்று (செப்டம்பர் 8ம் தேதி) டெக்சாஸில் இருந்த ராகுல் காந்தி, இன்று (9ம் தேதி) மற்றும் 10ம் தேதிகளில் வாஷிங்டனுக்கு செல்கிறார். ராகுல் காந்தி தனது பயணத்தின்போது இந்திய வம்சாவளியினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகத் தலைவர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து உரையாட உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து உரையாற்றினார். மாணவர்கள் மத்தியில் பல்வேறு விஷயங்களை பேசிய ராகுல் காந்தி, அவர்களின் கேள்விக்கும் பதில் அளித்தார். அப்போது பேசிய ராகுல் காந்தி, ''இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை நிலவி வருகிறது. ஆனால் பல நாடுகளில் வேலையின்மை பிரச்சனை இல்லை.

சீனாவில் நிச்சயமாக வேலையின்மை பிரச்சனை இல்லை; வியட்நாமிலும் இந்த பிரச்சனை இல்லை. நீங்கள் 1940ம் ஆண்டு, 1950 மற்றும் 1960ம் ஆண்டுகளை பார்த்தால் அமெரிக்கா உலகின் உற்பத்தி மையமாக விளங்கியது. அங்கு டி.வி.க்கள், வாஷிங் மெஷின்கள், கார்கள் என அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அதன்பிறகு உலகளாவிய உற்பத்தி அமெரிக்காவில் இருந்து கொரியா, ஜப்பானுக்கு சென்றது. கடைசியில் இது சீனாவுக்கு சென்றது.

இப்போது சீனா உலகின் உற்பத்தி மையமாக திகழ்ந்து வருகிறது. ஒரு நாட்டின் உற்பத்தி செயல்தான் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. ஆகவே இந்தியா, உற்பத்தி செயல் முறையை ஒழுங்கமைக்க வேண்டும். இந்தியாவில் தற்சார்பு உற்பத்தி முழுமை அடைந்தால்தான் சீனாவுடன் போட்டியிட முடியும். பலர் இந்தியர்களுக்கு திறமை இல்லை என்று கூறுகின்றனர். இந்தியாவில் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் திறமைசாலிகளுக்கு இந்தியா மதிப்பு கொடுப்பதில்லை. 

நமது கல்வித்துறையில் கருத்தியல் பிடிப்பு முரண்பாடுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். மாணவர்களிடம் தொழில் பயிற்சியை ஊக்குவித்து திறமைக்கும், கல்வித்துறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியை சமநிலை செய்ய வேண்டும்'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த ஆண்டும் அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை குறித்து பேசி இருந்தார். அப்போது ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்தி வருவதாக பாஜக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow